வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் என தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஜெயில். இதனையடுத்து இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் அநீதி .

கைதி & மாஸ்டர் திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலமடைந்த நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் அநீதி திரைப்படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் சிறப்பாக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்த நடிகை துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் சிதம்பரம், பரணி, அறந்தாங்கி நிஷா, வனிதா விஜயகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் அநீதி படத்திற்கு எட்வின் ஷாஜி ஒளிப்பதிவு செய்ய, ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டில் (2021) தொடங்கப்பட்ட அநீதி படத்தின் படப்பிடிப்பின் 90 சதவிகித படப்பிடிப்பு கடந்த (2021) அக்டோபர் மாதமே நிறைவடைந்தது.

தொடர்ந்து  அநீதி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக அநீதி படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.