அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டியை முன்னிட்டு ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்க வைத்துள்ளது. அதன் முழுவிபரம் இங்கே காணலாம்.

இந்தாண்டுக்கான 14-வது ஐபிஎல் போட்டி இந்தியாவில் துவங்கினாலும் கொரோனா 2-வது அலையின் உச்சம் காரணமாக பாதியில் ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 2-வது அலை சற்று குறைய ஆரம்பித்தபோதும், வீரர்களின் பாதுகாப்பு கருதி மீதி போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. 

இந்த 14-வது சீசன் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் வரும் 2022 ஆம் ஆண்டுக்கான 15-வது ஐபிஎல் சீசனை முன்னிட்டு மெகா ஏலம் அடுத்த மாதம் அல்லது ஜனவரியில் நடைபெற உள்ளது. இந்த முறை ஏற்கனவே இருந்த 8 அணிகளுடன் புதிதாக சேர்ந்த 2 அணிகளும் சேர்த்து மொத்தம் பத்து அணிகள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க உள்ளன. 

அதன்படி ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளன. ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறுவதற்கு முன்னர், தற்போது உள்ள 8 அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்களில் அதிகபட்சம் 4 பேரை ஒவ்வொரு அணியும் தக்கவைத்துக் கொள்ள முடியும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. தக்கவைக்கப்படும் வீரர்கள் குறித்து அறிவிக்க நேற்று இரவு வரை பிசிசிஐ கெடு விதித்திருந்தது. 

தற்போது அந்த கெடு நிறைவடைந்துள்ளதையடுத்து யார், யார் எந்த ஐபிஎல் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள் என்று ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதற்கிடையில் அதிகாரபூர்வமாக எந்தெந்த வீரர்கள் எல்லாம் எந்தெந்த அணியில் தக்கவைக்கப்பட்டு உள்ளார்கள் என்பதை பார்ப்போம்...

IPL MEGAAUCTION

அதன்படி, மும்பை இன்டியன்ஸ்!

ரோகித் ஷர்மா (16 கோடி),
ஜஸ்ப்ரீத் பும்ரா (12  கோடி),
சூர்யகுமார் யாதவ் (8 கோடி)
மற்றும் பொல்லார்ட் (6 கோடி - வெளிநாட்டு வீரர்)

மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் விடுவிக்கப்படலாம் என செய்திகள் வெளியான நிலையில், தகவல்களை பொய்யாக்கி மும்பை இந்தியன்ஸ் அணி சூர்யகுமார் யாதவை தக்கவைத்துள்ளது.

IPL MEGAAUCTION

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

ரசல் (12 கோடி - வெளிநாட்டு வீரர்),
வருண் சக்கரவர்த்தி (8 கோடி),
வெங்கடேஷ் ஐயர் (8 கோடி),
சுனில் நரைன் (6 கோடி - வெளிநாட்டு வீரர்)

கொல்கத்தா அணியில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தக்கவைக்கப்பட்டநிலையில்,  அந்த அணியின் முன்னாள் கேப்டனான தினேஷ் கார்த்திக் தக்கவைக்கப்படவில்லை.

IPLMEGAAUCTION

ராஜஸ்தான் ராயல்ஸ்!

சஞ்சு சாம்சன் (14 கோடி),
ஜாஸ் பட்லர் (10 கோடி - வெளிநாட்டு வீரர்),
யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (4 கோடி)

ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியில் இளம் வீரரான யாஷஸ்வி ஜெய்வால் மற்றும் சஞ்சு சாம்சன் தக்கவைக்கப்பட்டுள்ளது அந்த அணியின் பலத்தை கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPLMEGAAUCTION

பஞ்சாப் கிங்ஸ்!

மயங்க் அகர்வால் (12 கோடி)
மற்றும் அர்ஷ்தீப் சிங் (4 கோடி). 

பஞ்சாப் கிங்ஸ் அணியில் அந்த அணியின் கேப்டன் கே.எல் ராகுல் தக்கவைக்கப்படவில்லை. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ அணி கே.எல்.ராகுலை 20 கோடி கொடுத்து வாங்குவதாக தகவல் வெளியாகி சர்ச்சையான நிலையில், தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணி 4 பேருக்கு பதிலாக இருவரை மட்டுமே தக்கவைத்துள்ளது.

IPLMEGAAUCTION

டெல்லி கேபிடல்ஸ்!

ரிஷப் பந்த் (16 கோடி),
அக்சர் பட்டேல் (9 கோடி),
பிருத்வி ஷா (7.5 கோடி),
ஆன்ரிச் நோர்க்யா (6.5 கோடி - வெளிநாட்டு வீரர்)

டெல்லி கேபிடல்ஸ் அணி அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் துவக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷாவை தக்ககவைத்துள்ளது. மற்றொரு துவக்க ஆட்டக்காரரான தவானை தக்கவைக்கவில்லை.

IPLMEGAAUCTION

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

விராட் கோலி (15 கோடி)
முகமது சிராஜ் (7 கோடி)
மேக்ஸ்வெல் (11 கோடி - வெளிநாட்டு வீரர்)

ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணி 4 வீரர்களில் 3 வீரர்களை மட்டுமே தக்கவைத்துள்ளது. அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமான தென்னாப்பிரிக்க வீரர் ஏபி.டி.வில்லியர்ஸ் அனைத்துவிதமான போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும் அந்த அணியின் கேப்டன் விராட் கோலியும், கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளதால், வரும் ஐபிஎல் சீசனில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் யார் என ஆவல் எழுந்துள்ளது.

IPLMEGAAUCTION

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

கேன் வில்லியம்சன் (14 கோடி - வெளிநாட்டு வீரர்),
அப்துல் சமாத் (4 கோடி),
உம்ரான் மாலிக் (4 கோடி)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனும் ஆஸ்திரேலிய வீரராருமான டேவிட் வார்னர், சரியாக விளையாடதால் பாதியில் போட்டியின் கேப்டன் பதவியிருந்த விலக்கப்பட்டநிலையில், அவர் இந்தாண்டு தக்கவைக்கப்படவில்லை. மேலும் பெரிதும் எதிர்பார்த்த தமிழக வீரர் நடராஜனும் அணியில் தக்கவைக்கப்படவில்லை.

IPLMEGAAUCTION

சென்னை சூப்பர் கிங்ஸ்!

ரவீந்திர ஜடேஜா (16 கோடி),
மகேந்திர சிங் தோனி (12 கோடி),
ருதுராஜ் கெய்க்வாட் (6 கோடி),
மொயின் அலி (8 கோடி - வெளிநாட்டு வீரர்)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எதிர்பார்த்தைபோல கேப்டன் தோனி, ருதுராஸ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா தக்கவைக்கப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்க வீரர் டூ பிளசிஸ் மற்றும் சின்ன தல என்று அழைக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா தக்கவைக்கப்படவில்லை.