பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் சிறந்த நடிகராகவும் வலம் வரும் நடிகர் சூர்யா சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி கிளைமாக்ஸ் காட்சியின் கடைசி சில நிமிடங்களில் திரையங்குகளை அதிர வைத்தார்.

முன்னதாக இயக்குனர் பாலா இயக்கத்தில் புதிய படத்தில் தற்போது நடித்து வரும் நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே நடிகர் சூர்யாவிற்கு ஆஸ்கர் அகாடமியில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைப்படங்களை ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலின் போட்டியில் கலந்து கொண்ட நிலையில், தற்போது நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகை கஜோல் இருவரும் ஆஸ்கார் அகாடமியின் புதிய தேர்வு குழுவின் உறுப்பினர்களாக இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரை உலகில் இருந்து முதல் நடிகராக நடிகர் சூர்யா ஆஸ்கார் அகாடமியின் தேர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்து தொடர்ந்து நடிகர் சூர்யாவிற்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், "தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கார் அகாடமி விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்! வானமே எல்லை!” என பதிவிட்டு தனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் அந்த பதிவு இதோ…

 

தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, @TheAcademy விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி @Suriya_offl அவர்களுக்கு எனது பாராட்டுகள்!

வானமே எல்லை!

— M.K.Stalin (@mkstalin) June 29, 2022