தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களின் ஒருவராகவும் சிறந்த தயாரிப்பாளராகவும் வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் நாளை (நவம்பர் 2ஆம் தேதி) நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாகிறது ஜெய் பீம் திரைப்படம். தனது 2D எண்டர்டெயின்மெண்ட் சார்பாக ஜெய்பீம் திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார் சூர்யா.

இயக்குனர் த.சே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, லிஜோமொள் ஜோஸ், பிரகாஷ்ராஜ், மணிகண்டன், ராஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ள ஜெய்பீம் திரைப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

முன்னதாக இன்று தமிழக முதல்வரை நேரில் சந்தித்து சூர்யா மற்றும் ஜோதிகா தங்களது 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் இருளர் பழங்குடி இன மக்களின் கல்விக்காக ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலைக் கிராமங்களில் வசிக்கும் இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கையையும் அதன் பிரச்சினைகளையும் பற்றிப் பேசும் ஜெய்பீம் திரைப்படத்தை சிறப்பு காட்சியில் பார்வையிட்ட தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் நடிகர் சூர்யா மற்றும் ஜெய்பீம் படக்குழுவினரை ஆடி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாண்புமிகு முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பார்வையளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன்விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு! நேற்று நண்பர் @Suriya_offl வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள #ஜெய்பீம் திரைப்படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம்” என குறிப்பிட்டு ஜெய்பீம் படக்குழுவினருக்கு புகழாரம் சூட்டும் வகையில் அறிக்கை ஒன்றையும் இணைத்து பதிவிட்டுள்ளார். ஜெய்பீம் திரைப்படம் குறித்த தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் பதிவு இதோ...