தமிழ் திரை உலகின் சிறந்த நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா அடுத்ததாக கலைப்புலி.எஸ்.தாணு தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். முன்னதாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தனது 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சிறந்த படைப்புகளை வழங்கி வரும் நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் நாளை (நவம்பர் 2ஆம் தேதி) நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாகிறது. ஜெய்பீம் திரைப்படத்தை இயக்குனர் த.சே.ஞானவேல் எழுதி இயக்கியுள்ளார்.

மலைக் கிராமங்களில் வசிக்கும் இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதைக்களமாக உருவாகியிருக்கும் ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இருளர் பழங்குடியின மக்களின் கல்வி நலனுக்காக நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக ஒரு கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார்.

சூர்யா , ஜோதிகா மற்றும் ஜெய்பீம் படக்குழுவினர் இன்று தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினர். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பழங்குடி இன மக்கள் நல அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி திரு.சந்துரு அவர்களிடம் இந்த காசோலையை ஒப்படைத்தார்.

திரைத்துறையில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மட்டுமல்லாமல் சமூக பொறுப்புள்ள தமிழராக, நடிகர் சூர்யா தனது அகரம் ஃபவுண்டேஷன் மூலமாக பல்லாயிரம் மாணவ மாணவிகளின் கல்வி நலனுக்காக பல நற்பணிகள் செய்து வரும் நிலையில், தற்போது இருளர் பழங்குடியின மாணவ மாணவிகளின் கல்வி நலனுக்காக ஒரு கோடி நிதி உதவி செய்திருப்பதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.