இந்திய திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் புதுடெல்லியில் நடைபெற்ற 67-வது இந்திய திரைப்பட தேசிய விருது விழாவில் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன்பு லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து மருத்துவமனையில் ரஜினிகாந்த் அவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ரத்தநாளங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. எனவே அடைப்புகளை நீக்கும் விதமாக Carotid Artery Revascularization  எனும் மறுசுழற்சி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஓரிரு நாட்களில் சூப்பர்ஸ்டார் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

முன்னதாக தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் மருத்துவமனையில் நேரில் சென்று சூப்பர் ஸ்டாரின் உடல் நலம் விசாரித்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் சூப்பர் ஸ்டார் . 

மேலும் திரும்பியது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சமீபத்தில் தொடங்கிய HOOTE app-ல் “அனைவருக்கும் வணக்கம்! சிகிச்சை முடிந்தது... நான் நல்லா இருக்கேன்… நைட்டு தான் நான் வீட்டுக்கு வந்தேன்... என்னுடைய ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்த அனைத்து ரசிகர் பெருமக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்... மற்றும் என் நலன் பற்றி விசாரித்த என் நண்பர்களுக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!!!” என தனது குரலில் பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவரது பல கோடி ரசிகர்களும் பொதுமக்களும் விரைவில் அவர் மீண்டு வர பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும் செய்த நிலையில் நேற்று இரவு சூப்பர்ஸ்டார் வீடு திரும்புகிறது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எனவே வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை கொண்டாட  அனைவரும் தயாராகிவிட்டனர்.