போனி கபூர் தயாரிப்பில் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படம் குறித்து அப்டேட் எதுவும் வெளியாவது இல்லை. அதனால் அப்டேட் கேட்டு அவ்வப்போது ஏதாவது ஒரு ஹேஷ்டேகை ட்விட்டரில் அதுவும் தேசிய அளவில் டிரெண்டாகவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் தல ரசிகர்கள். அஜித்தின் பிறந்தநாள், தீபாவளி என்று எதற்குமே அப்டேட் வராதது ரசிகர்களை கவலை அடைய செய்தது. 

வலிமை படத்திற்காக அஜித் பைக் ஓட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் ரசிகர்கள் இந்நாள் வரை கொண்டாடி வந்தார்கள். கடைசியாக அஜித் தன் வலிமை குடும்பத்துடன் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலானது. அது படக்குழு வெளியிட்டது இல்லை. இருப்பினும் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்தனர்.  

சமீபத்தில் வலிமை திரைப்படத்தின் இசைக்கோர்ப்பு பணிகள் தொடங்கியிருப்பதை புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருந்தார் யுவன் ஷங்கர் ராஜா. வலிமை படத்தை பான் இந்தியா படமாக வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிப்பதாக கூறப்படுகிறது. 

வலிமை படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி பாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. 

அஜித் அண்மையில் வாரணாசிக்கு சென்றது தெரிய வந்தது. தொப்பி, மாஸ்க் அணிந்து சுற்றுலாப் பயணி போன்று ஜாலியாக வாரணாசியை சுற்றிப் பார்த்திருக்கிறார் தல. சாட் கடைக்காரருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் சில நாட்கள் முன்பு வெளியாகி வைரலானது. இந்நிலையில் இன்று அஜித்தின் லேட்டஸ்ட் லுக் கொண்ட புகைப்படம் வெளியாகி இணையத்தை அசத்தி வருகிறது. 

முன்னதாக வலிமை படத்தின் படப்பிடிப்பு குஜராத், ராஜஸ்தான், புனே உள்ளிட்ட வடமாநிலங்களின் பல இடங்களில் நடைபெற்ற நிலையில், தற்போது மீதமுள்ள படக்காட்சிகளை தென் ஆப்பிரிக்காவில் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அங்கு படத்தின் சில முக்கியமான சண்டைக்காட்சிகளை படக்குழு எடுக்க இருப்பதாக தெரிகிறது. இதற்காக வலிமை படத்தின் இயக்குனர் வினோத் மற்றும் அவரது குழுவும் தென் ஆப்பிரிக்காவிற்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இத்துடன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடியவரும் எனத் தெரிகிறது.