நடிப்பிற்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்வது என்பதற்கு இலக்கணமாக விளங்கும் நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான மகான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸ்ஸான மகான் திரைப்படத்தில் வழக்கம்போல் தன் நடிப்பால் ரசிகர்களை மயக்கினார் சீயான் விக்ரம்.

இதனையடுத்து இந்திய திரை உலகின் பிரம்மாண்ட படைப்பாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு கோடை வெளியீடாக ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பல விதமான வித்தியாசமான கெட்டப்புகளில் மிரட்டலாக சீயான் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் S.S.லலித்குமார் தயாரித்துள்ள கோப்ரா படத்திற்கு ஹாரிஸ் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

சீயான் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎஃப் பட கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க மியா ஜார்ஜ், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, ஷாஜி சென், பத்மப்ரியா, மிருணாளினி ரவி, ரோபோ ஷங்கர், மாஸ்டர் பூவையார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார்.

கோப்ரா திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகராக களமிறங்கியுள்ள கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தொடர்ந்து கோப்ரா திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.