தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் கதாநாயகனாக, வில்லனாக, மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

தொடர்ந்து வெப்சீரிஸிலும் நடித்துவரும் நடிகர் சரத்குமார் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு இரை வெப்சீரிஸ் aha தமிழ் தளத்தில் ரிலீசானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இரை வெப்சீரிஸை உலகநாயகன் கமல்ஹாசனின் உதவி இயக்குனரும் தூங்கா வனம் மற்றும் கடாரம்கொண்டான் படங்களின் இயக்குனருமான ராஜேஷ்.எம்.செல்வா இயக்கியுள்ளார்.

முன்னதாக இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சரத்குமார், மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜேம்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தென்னிந்திய திரையுலகில் சிறந்த நடிகராக வலம் வரும் நடிகர் சரத்குமாரின் 150வது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தற்போது வெளியானது. மேக்னம் மூவிஸ் தயாரிப்பில் ஷ்யாம் பிரவீன் இயக்கும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 150-வது படத்திற்கு தி ஸ்மைல் மேன் என பெயரிடப்பட்டுள்ளது.

இனியா மற்றும் ஷியா ரோஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவில் ஆனந்த் திரைக்கதை வசனங்கள் எழுத கவாஸ்கர் அவினாஷ் இசையமைக்கும் தி ஸ்மைல் மேன் படத்திற்கு ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். தி ஸ்மைல் மேன் படத்தின் படப்பிடிப்பு இன்று (பிப்ரவரி 21-ம் தேதி) தொடங்குகிறது. இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.