இந்திய திரை உலகின் ஜாம்பவானாக விளங்கிய இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள் வெள்ளித்திரையில் பலதுறை காவியங்களை படைத்ததோடு மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல மாயாஜாலங்களை நிகழ்த்தியவர். இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் தயாரிப்பில் உருவான பல சீரியல்கள் இன்றும் யூட்யூபில் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் மின்பிம்பங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டு குடும்பங்கள் கொண்டாடும் 90களின் ஃபேவரட் நகைச்சுவை தொடராக வெளிவந்தது ரமணி vs ரமணி. இரண்டு பாகங்களாக வெளிவந்த ரமணி vs ரமணி தொடர் தற்போது மீண்டும் ரசிகர்களுக்காக புதிதாக தயாராகியுள்ளது.

முன்னதாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான போது முதல் பாகத்தில் பிரித்திவிராஜ் மற்றும் வாசுகி ஆனந்த் இருவரும் ரமணி கதாபாத்திரங்களில் நடிக்க, 2-வது பாகத்தில் ராம்ஜியும் தேவதர்ஷினியும் ரமணி கதாபாத்திரங்களுக்கு இன்னும் உயிர் ஊட்டினர். தற்போது தயாராகியுள்ள 3-வது பாகத்தில் ராம்ஜியும் வாசுகி ஆனந்தும் இணைந்து ரமணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

மகள் ராகினி கதாபாத்திரத்தில் பொன்னி சுரேஷும் மகன் ராம் கதாபாத்திரத்தில்  பரம் குகனேஷ் நடிக்கின்றனர்.முதல் இரண்டு பாகங்களை இயக்கிய இயக்குனர் நாகா 3-வது பாகத்தையும் இயக்குகிறார். கவிதாலயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரமணி vs ரமணி 3.O வெப் சீரிஸுக்கு கோபு பாபு, பரத், விக்னேஷ்வரி ஆகியோர் திரைக்கதை வசனம் எழுத, சதீஷ் ஒளிப்பதிவில், ரெஹான் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் பிரபல OTT தளமான aha ஒரிஜினல் தளத்தில் வருகிற மார்ச் 4ஆம் தேதி முதல் ரமணி vs ரமணி 3.O வெப்சீரிஸாக வாரம் ஒரு எபிசோட் ரிலீஸாகவுள்ளது.ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள ரமணி vs ரமணி 3.O வெப் சீரிஸின் கலக்கலான போஸ்டர் இதோ…