கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் தொடங்கி, தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படம் வரைக்கும் ஏராளமான கிராமத்து, குணச்சித்திர, நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் தவசி. வருத்தப்படாத வாலிபர் சங்கம், கொம்பன் உள்ளிட்ட படங்களில் இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. கருப்பன் குசும்புக்காரன் என்ற ஒற்றை வசனத்தின் மூலம் பிரபலமடைந்தவர். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், நடிகர் சூரிக்கு அப்பாவாக இவர் நடித்த கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பெற்றது. குறி சொல்லும் வேடம், சாமியாடும் பாத்திரம் இவருக்கு அருமையாக பொருந்தும். 

தற்போது உணவுக்குழாயில் ஏற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசி, மதுரை சரவணா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். சிகிச்சைக்குப் பணமில்லாமல் தான் திண்டாடுவதாகவும், தனக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

புற்றுநோயால் மெலிந்த உடலுடன் அவரது வழக்கமான கம்பீரமான மீசையில்லாமல் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். அவரது தோற்றம் காண்போர் மனதை உறையவைக்கிறது. தவசியின் சிகிச்சைக்கு சரவணா மருத்துவமனை சார்பில் அதன் உரிமையாளரும், திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏவுமான டாக்டர் சரவணன் தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் உதவி வருகிறார்.

இந்நிலையில் இந்த தகவல் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி ஆகியோரது கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தவசியின் சிகிச்சை செலவுக்காக நடிகர் சூரி முதற்கட்டமாக ரூ. 20,000 ரூபாயை வழங்கியுள்ளார். மேலும் அவருக்கும் அவரை கவனித்துக் கொள்ளும் உதவியாளருக்கும் மூன்று வேளை உணவும் வழங்குவதாக சூரி உறுதியளித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சார்பில் முதற்கட்டமாக ரூ. 25,000 வழங்கியுள்ளார். அவரது ரசிகர் மன்ற தலைவர் மோகன், தவசியை நேரில் சந்தித்து நிதியுதவியை வழங்கினார். 

மக்களை மகிழ்வித்த ஒரு கலைஞனின் வாழ்வில் இவ்வளவு சோகம் நிறைய வேண்டுமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த 2020 வருடம் மிகவும் மோசமானது என்பதற்கு இதுவும் எடுத்துக்காட்டு என்று கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக திரையுலகை சேர்ந்தவர்களுக்கு இந்த வருடம் ராசியே இல்லை என்று கூறி புலம்பி வருகின்றனர்.