சின்னக்குயில் சித்ராவுக்கென இசையுலகில் ரசிகர்கள் ஏராளம். இனிமையான இவரது குரலால் பல கோடி ரசிகர்களை ஈர்த்துள்ளார். இவருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் கழித்து பெண் குழந்தை பிறந்தது. ஆட்டிசம் பாதிப்பு கொண்ட அந்த குழந்தைக்கு நந்தனா என்று பெயர் வைத்தார்கள். 

கடந்த 2011ம் ஆண்டு இசை நிகழ்ச்சிக்காக சித்ரா துபாய்க்கு சென்றிருந்தார். மகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். அப்பொழுது ஹோட்டலில் இருந்த நீச்சல் குளத்தில் விழுந்த நந்தனா நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். 8 வயது மகளை பறிகொடுத்த சித்ரா உடைந்துபோய்விட்டார்.

விஷூ பண்டிகை அன்று நந்தனா இறந்தது குறிப்பிடத்தக்கது. இன்று மலையாளிகள் விஷூ பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சித்ராவோ நந்தனாவை நினைத்து கண்ணீர் விடுகிறார். நந்தனா சிரித்த முகமாக இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு சித்ரா கூறியிருப்பதாவது,

உன் வாழ்க்கை எங்களுக்கு ஆசிர்வாதம். உன் நினைவுகள் எங்களுக்கு பொக்கிஷம். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு உன் மீது பாசம் வைத்திருக்கிறோம். உன் நினைவு என்றும் எங்கள் இதயத்தில் இருக்கும். ஒரு நொடியானாலும் உன்னை ஒரேயொரு முறை பார்த்து நீ எங்களுக்கு எப்படிப்பட்டவர் என்பதை தெரிவிக்க வேண்டும் போன்று இருக்கிறது. மிஸ் செய்கிறோம் டியர் என்று தெரிவித்துள்ளார்.

பாடகி சித்ராவின் இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், நந்தனாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறோம். உங்களின் வேதனையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. கடவுள் உங்களுக்கு தைரியத்தை கொடுக்கட்டும்.

பெற்ற பிள்ளையை இழக்கும் சோகம் தான் பெரும் சோகம். ஆனால் வாழ்ந்து தானே ஆக வேண்டும். இந்த தாயின் வேதைனையை பார்க்கும் போது அழுகையும், கோபமும் வருகிறது என இது குறித்து பதிவு செய்து வருகின்றனர்.