கடந்த சில வாரங்களாகவே சிம்பு திரைப்படங்களின் அப்டேட்டுகள் தான் கோலிவுட் வட்டாரங்களில் அதிகமாக வெளியாகி வருகிறது. அடுத்தடுத்து தன்னுடைய அடுத்த பட அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தி வருகிறார் சிலம்பரசன். அந்த வகையில் 2018-ம் ஆண்டு சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் ஆரம்பமான திரைப்படம்தான் கன்னட ரீமேக் படமான மஃப்டி. இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்தது. 

அதன் பிறகு சிம்புவின் மாற்றம் தான் அனைவருக்கும் தெரியுமே. தற்போது ஈஸ்வரன் படத்தை முடித்துவிட்டு, மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகளில் பணியாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து ஞானவேல்ராஜா தயாரிக்கும் கன்னட ரீமேக் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படத்தின் தமிழ் தலைப்பை அறிவித்து அசத்தியுள்ளார். 

பத்து தல என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் டைட்டிலில் போஸ்டரை தமிழ் சினிமாவைச் சேர்ந்த 10 முன்னணி இயக்குனர்கள் வெளியிட்டனர். பத்து தல ராவணன் என்பதற்கேற்ப இந்த படத்தில் சிம்புவுக்கு நெகட்டிவ் கலந்த அதிரடி வேடம் என்கிறார்கள். ஜனவரியில் பத்து தல படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்ள இருப்பதாக திரை வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. இயக்குனர் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கவுள்ளார். 

தற்போது மாநாடு படத்தில் ஒரு வாரம் விடுமுறை எடுத்துள்ள சிம்பு சபரிமலைக்கு மாலை போட்டுள்ள புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பத்து தல திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா கூறியதாவது…ஸ்டுடியோ க்ரீன் (Studio Green) நிறுவனம் சார்பில் பிரமாண்ட இப்படத்தை அறிவிப்பது பெருமையாக உள்ளது. எஸ் டி ஆர் அதீதமான சுறுசுறுப்புக்கும், உற்சாகத்திற்கும் பெயர் பெற்றவர் தற்போது தன்னையே முழுதாக மாற்றி வேறொரு பரிணாமத்தில் படு உற்சாகமாக அவர் வந்து நிற்பது, பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இத்திரைப்படம் முடிவான உடனேயே அவரது கதாப்பாத்திரத்தை ஒட்டி, மிகச்சரியான, அதிரடியான தலைப்பை தேடினோம்.

பல்வேறு பெயர்களை பரிசீலித்த பின்னால் பத்து தல தலைப்பு உறுதிசெய்யப்பட்டது. ரசிகர்கள் படம் பார்க்கும் தலைப்பின் அர்த்தத்தை அதன் ஆழத்தை படம் வழியே கண்டிப்பாக உணர்வார்கள். கௌதம் கார்த்திக் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்துடன் ஏற்கனவே பணிபுரிந்துள்ளார். எங்களை பொறுத்தவரையில் அவர் எங்கள் குடும்பத்தில் ஒருத்தர்.

பத்து தல படத்தில் அவரது பாத்திரம் வெகு கனமானது. அவரது திரை வாழ்வில் இப்படம் அவருக்கு மிகப்பெரும் பெயரை பெற்றுத்தரும் படமாக இருக்கும். எனது முதல் தயாரிப்பான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தை இயக்கிய காலத்திலிருந்து, இயக்குநர் ஓபிலி N. கிருஷ்ணா அவர்களும் நானும் பல்லாண்டுகளாக நல்லதொரு நட்புறவினை பேணி வருகிறோம். திரையுலகின் பெரும் ஆளுமைகள் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில் மேலும் பல ஆச்சர்யங்களும் இணையவுள்ளது. அது பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.