கடந்த 2006-ம் ஆண்டு வெளியான முன்கரு மலே எனும் கன்னட படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. 2010-ம் ஆண்டு தமிழில் அழுக்கன் அழகாகிறான் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தில்லாலங்கடி படத்தில் தமன்னாவின் தங்கையாக இவர் நடித்த பாத்திரம் பேசப்பட்டது. அதன் பின் கொலைக்காரன், பீஸா 2 வில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த சூது கவ்வும் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது. 

கடைசியாக கடந்த 2018ஆம் ஆண்டு ஜானி படம் அவரது நடிப்பில் வெளியானது. தற்போது பல்லு படாம பாத்துக்க, பார்ட்டி, பஹீரா. தேவதாஸ் பிரதர்ஸ், அழகிய கண்ணே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அழகிய கண்ணே படத்தில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவகுமார் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோயினாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனரான விஜயகுமார் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள கோணப்பட்டி கிராமத்தில் நடந்து வருகிறது. 

இதில் கிராமத்து மக்களும் கலந்து கொள்ள 100-க்கும் மேற்பட்டவர்களை கொண்டு படப்பிடிப்பு நடைபெற்றது. மேலும் கிராம மக்களும் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க கூடியிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் இந்த நேரத்தில் பெரும் கூட்டத்தை கூட்டிய படக்குழுவினருக்கு அபராதம் விதித்தனர்.

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் படப்பிடிப்பு நடத்திய படக் குழுவினருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேற்கொண்டு படப்பிடிப்பை நிறுத்தவும் உத்தரவிட்டனர். இதனால் படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் கதிர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் படமாக்கப்பட்டது. இதில் இறுதி ஊர்வல காட்சியை பெரும் கூட்டத்தை திரட்டி எடுத்த படக்குழுவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதோடு போலீஸிலும் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

பிரபு தேவா நடிப்பில் தயாராகி வரும் பஹீரா படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் சஞ்சிதா ஷெட்டி. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.