இந்திய சினிமாவில் சிறந்த நடிகைகளுள் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். தடையறத் தாக்க படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகியவர், தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, NGK போன்ற படங்களில் நடித்து அசத்தினார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பிற மொழிப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

கொரோனா காலத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் முன் வந்து தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வந்தனர். லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில், தனது வீட்டுக்கு அருகில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தினமும் உணவு வழங்கி வந்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். டெல்லியில் உள்ள தனது பெற்றோர்களை பார்க்க சமீபத்தில் டெல்லி சென்றிருந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், மீண்டும் ஹைதராபாத்துக்கு திரும்பியுள்ளார். 

இந்நிலையில், ஹைதராபாத்தில் அல்லும் பகலும் உழைத்து வரும் காவல்துறை அதிகாரிகளை ஊக்குவிக்கும் விதமாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த தொற்று பரவல் காலத்தில், ஏகப்பட்ட போலீஸார் தங்கள் குடும்பத்தையும், ஆரோக்கியத்தையும் துச்சம் என கருதி வெயிலிலும் மழையிலும் 24 மணி நேரம் காவல் காத்து, பொதுமக்களை இயல்பான நிலையில் வைத்துள்ளீர்கள் என வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும், தெலங்கானா முதல்வருக்கும் தனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். 

ரகுல் ப்ரீத் சிங்கின் வீடியோவை பார்த்த கமிஷனர் அஞ்சனி குமார், அவருக்கு நன்றி தெரிவித்து பதில் போட்டிருக்கிறார். உங்களை போன்றவர்களின் ஊக்குவிப்பால், மேலும், உற்சாகம் அடைந்து காவல் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். கொரோனாவில் இருந்து மீண்ட 390 போலீஸ் அதிகாரிகள் மீண்டும் பணிக்கு திரும்பி மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்காக நடிகை ரகுல் ப்ரீத் சிங் காத்து இருக்கிறார். வெறித்தனமான வொர்க்கவுட் பிரியையான ரகுல் ப்ரீத் சிங், ஜிம் எதுவும் திறக்காத நிலையில், வீட்டில் இருந்தபடியே வொர்க்கவுட் செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாவில் போட்டு வைரலாக்கி வருகிறார். 

இதைத்தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். 24AM ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. கருணாகரன், இஷா கோபிகர், பாலசரவணன் ஆகியோர் உள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தின் CG பணிகள் ஒருபக்கம் இருக்க, படப்பிடிப்பும் மீதம் உள்ளது போல் தெரிகிறது.