கலையை ஆத்மார்த்தமாக காதலிக்கும் ஒரு கலைஞன் தொடர்ந்து ரசிகர்களை மதித்து அவர்களுக்கான சிறந்த படைப்புகளை வழங்குவதை தனது தலையாய கடமையாக கொண்டு இருப்பான். அப்படி படைக்கப்படும் படைப்புகளுக்கு அதற்குரிய சரியான அங்கிகாரங்கள் அனைத்து தரப்பிலிருந்தும் கிடைக்காத போதிலும் தொடர்ந்து தனது கலையில் அடுத்த உச்சத்தை தொட முயற்சித்து மீண்டும் மீண்டும் ரசிகர்களுக்கு தன் படைப்புகளின் வழியாக புதுமைகளை வழங்கி வருபவான். அப்படி ஒரு மகத்தான கலைஞன் தான் இயக்குனர் பார்த்திபன் அவர்கள்.

அந்த வகையில் இயக்குனர் பார்த்திபனின் திரைப்பயணத்தில் மணி மகுடமாக தயாராகியுள்ள திரைப்படம் இரவின் நிழல். உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் (Non Linear Single Shot) திரைப்படமாக தயாராகியிருக்கும் இரவின் நிழல் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இரவின் நிழல் திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை ஜூலை 15ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் கேட்பதற்கே பிரம்மிப்பை ஏற்படுத்தும் இரவின் நிழல் திரைப்படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். முன்னதாக திரைப்படத்தைப் பார்த்து ரசித்த பிரபலங்களும் இயக்குனர் பெருமக்களும் இயக்குனர் பார்த்திபன் அவர்களையும் இரவின் நிழல் படத்தையும் படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இரவின் நிழல் படத்தை புகழ்ந்து பேசும் வீடியோ வெளியானது. அந்த வீடியோவில், “பார்த்திபன் எப்போதும் பல வித்தியாசமான முயற்சிகள் செய்ய வேண்டும் என துடிக்கிற ஒரு கலை ரசிகன். நான் லீனியர் சிங்கிள் ஷாட் உலகத்திலேயே இதுவரைக்கும் யாருமே எடுத்தது கிடையாது. ஒரு 29 நிமிடங்கள் இந்தப் படத்தை எப்படி எடுத்திருக்கிறார்கள் என காட்டியிகிறார்களாம் புல்லரிக்குமாம். இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும்.” என ரஜினிகாந்த் பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…