திரைத்துறையில் குரூப் டான்ஸராக நுழைந்து, நடன மாஸ்டராக, அதன்பின் நடிகராக தற்போது இயக்குனராகவும் உயர்ந்து நிற்பவர் ராகவா லாரன்ஸ். சினிமா தாண்டி நிஜ வாழ்விலும் லாரன்ஸ் ஹீரோ தான். ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் உணவிற்கு உதவி செய்து வருகிறார். 

ராகவா லாரன்ஸ் - பைவ் ஸ்டார் கதிரேசன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ருத்ரன். இதன் போஸ்டர் ஒன்றையும் சமீபத்தில் வெளியிட்டது படக்குழு. லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிகிறார். கே.பி.திருமாறன் திரைக்கதை மற்றும் வசனம் எழுதுகிறார். 

ஆடுகளம், ஜிகர்தண்டா உள்ளிட்ட பல வரவேற்பைப் பெற்ற படங்களை அவர் தயாரித்திருந்தாலும், இதுவரை இயக்குனராகப் பணிபுரிந்ததில்லை. தற்போது ருத்ரன் படத்தைத் தயாரித்து, இயக்கி வருகிறார் கதிரேசன். இந்த படத்தில் சரத்குமார் முக்கிய ரோலில் நடிக்கிறார். ஏற்கனவே காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸ் சரத்குமார் ஆகிய இருவரும் இணைந்து நடித்த நிலையில் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரும் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நடந்து வந்த ருத்ரன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகவும், விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளதென தகவல் தெரியவந்தது. 

இதைத்தாண்டி மற்றுமொரு ருசிகர தகவல் கலாட்டா செவிகளுக்கு எட்டியுள்ளது. அது என்னவென்றால், ராகவா லாரன்ஸின் மாறுபட்ட நடிப்பை ரசிகர்கள் காணப்போகிறார்கள் என்று திரை வட்டாரமே பேசிக்கொண்டு வருகிறது. வழக்கமாக ஹாரர் நகைச்சுவை விருந்து வைக்கும் லாரன்ஸ் மாஸ்டர், இந்த படத்தில் வேறொரு தரமான பரிமாணத்தில் நம்மை என்டர்டெயின் செய்ய விருக்கிறாராம். 

குழந்தைகள், பெரியோர்கள், சினிமா பிரியர்கள் என அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படி இந்த ருத்ரன் திரைப்படம் உருவாகி வருகிறதாம். இதனால் வெறித்தன வெயிட்டிங்கில் உள்ளனர் திரை ரசிகர்கள்.