பெண்களுக்கு தொடர்ந்து நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு என்னாளும் ஒரு முடிவு கிடைப்பதே இல்லை. அலுவலகங்களிலும் சரி படிக்கும் கல்லூரி பள்ளிகளிலும் சரி ஏன் குடும்பத்தில் கூட பாலியல் தொல்லை பெண்களை வாட்டி வதைத்துக் கொண்டு தான் இருக்கிறது.தினசரி செய்திகளில் இது சார்ந்து எத்தனை செய்திகளை பார்த்தாலும் நாம் பார்ப்பதும் கேட்பதும் மொத்தத்தில் மிகச் சொற்பமான சதவிகிதம் தான். 

பெரும்பாலான பெண்கள் பெண் குழந்தைகள் இந்த விஷயங்களை வெளியில் சொல்ல பயந்து சொல்லாமல் விடும் வழக்குகள் தான் அதிகம். தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் சரிவர இயங்காமல் இருக்கும் இந்த காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே இயங்குகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகளின் மூலமும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தமிழகத்தின் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் உள்ள ஒரு தனியார்  பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆசிரியர்  ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது மிகப்பெரிய  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வந்த நிலையில் ராட்சசன் திரைப்படத்தின் இயக்குனர் ராம்குமார் இந்த வழக்கு குறித்து பேசியுள்ளார். 

ராம்குமார் இயக்கிய ராட்சசன் திரைப்படத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும்  இன்பராஜ் என்ற ஆசிரியர் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும் அந்த “இன்பராஜ் கதாபாத்திரம்  சுயமாக உருவாக்கம் செய்யப்படவில்லை, பல உண்மை சம்பவங்களின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது. அந்த சம்பவங்களின் குற்றவாளிகள் இன்பராஜை விட மோசமானவர்கள்” என தெரிவித்துள்ளார்.