நடிகர் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக இந்திய சினிமாவின்  சூப்பர் ஸ்டார் சிம்மாசனத்தில்  அமர்ந்திருக்கிறார். இயக்குனர்  சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ந்து பல மெகா ஹிட் சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றும் தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாகவே இருக்கிறார். 

கடைசியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தர்பார் திரைப்படத்தில் நடித்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்ததாக இயக்குனர் சிவா இயக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த அண்ணாத்த படத்தின்  படப்பிடிப்பில் தனது பகுதி காட்சிகள் அனைத்தையும் முடித்து விட்டு சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.

விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைய உள்ள நிலையில் திரைப்படத்திற்கான புரமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. அண்ணாத்த படத்தின் பிரமோஷன் அணியில் இருக்கும் பிரவீன் நாயர் தனது ட்விட்டர் பதிவில் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் ப்ரோமோஷனாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் ,டீஸர், டிரெய்லர் என அனைத்திற்கும் மக்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தில்  ரஜினிகாந்துடன் இணைந்து நடிகைகள் குஷ்பூ ,மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா மற்றும் நடிகர்கள் பிரகாஷ்ராஜ் ஜாக்கி ஷெரப் என பெரிய நடிகர் பட்டாளம் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.