கொரோனா வைரஸ்  தாக்கத்தின் இரண்டாம் அலையில்  ஒட்டுமொத்த உலகமும் திக்குமுக்காடி வருகிறது. இந்தியாவில் போதிய படுக்கை வசதிகள்  போதிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல்  மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். மத்திய அரசு மாநில அரசு  மருத்துவர்கள் செவிலியர்கள் முன்கள பணியாளர்கள் என பலரும் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.

இந்திய திரை உலகை சேர்ந்த பல பிரபலங்களும் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு  வருவதும் அதில் ஒரு சிலர் உயிரிழப்பதும் தினசரி நாம் பார்க்கிறோம். அந்த வகையில் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  நடிகர் காளி வெங்கட் கொரோனாவில் இருந்து மீண்டு வந்து தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

22 நாட்கள் கொரோனா தொற்றால் அவதிப்பட்ட நடிகர் காளி வெங்கட் சளி, காய்ச்சல், மூச்சுத்திணறலால்  அதிகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட வேண்டிய சூழ்நிலையில் இருந்ததாகவும் ஆனால் மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாத காரணத்தால்  மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி வீட்டிலேயே இருந்து தனிமைப் படுத்திக் கொண்டு  தற்போது முழுவதுமாக குணம் அடைந்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். 

கொரோனா வைரஸின் தாக்கம் மிகவும் கடினமாக இருந்ததாகவும் எனவே மக்கள் அனைவரும் முடிந்தவரை கொரோனா வைரஸ் தாக்குதல் வராமல் பார்த்து, முன்னெச்சரிக்கையாக இருந்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். அப்படியே ஒருவேளை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானாலும் பதற்றப்படாமல் தைரியமாக எதிர்கொண்டு மீண்டு வர வேண்டும்  என தனது அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை மக்களுக்கு விழிப்புணர்வோடு  தெரிவித்துள்ளார். 

இன்றும்  மக்கள் சிலர் கொரோனா வைரஸ் மீதான புரிதல் இல்லாமல் அலட்சியமாக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடக்காமல் இருக்கும் இந்த சூழ்நிலையில் காளி வெங்கடின் இந்த பதிவு மக்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.