“தமிழகத்தில் மீண்டும் கொரோனா அலை தொடங்கி உள்ளதா?” என்பது குறித்து, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா என்னும் கொடிய வைரஸ், முதல் அலையை கடந்து 2 வது அலையும் வந்து, இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் 3 வது அலையும் கடந்திருக்கிறது.  இவற்றில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸ், மெல்ல இயல்பு நிலை திரும்பியிருந்த நிலையில் தற்போது, தமிழகத்தில் தினசரி கொரோனா எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மீண்டும் உயர்ந்திருக்கிறது.

அந்த வகையில், தமிழகத்தில் நாளோன்றுக்கு சுமார் 25 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் இந்த தொற்று எண்ணிக்கையானது சுமார் 100 ஆக அதிகரித்து, தற்போது அதன் எண்ணிக்கை தற்போது சற்று இன்னும் அதிகரித்து இருக்கிறது. 

இதனையடுத்து, கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதார செயலர் கடந்த வாரம் கடிதம் எழுதி எச்சரிக்கை செய்திருந்தார். 

அந்த கடிதத்தில், “கொரோனா தொற்று குவியல்கள் corona cluster எண்ணிக்கையானது, தற்போது சற்று அதிகரித்து இருக்கிறது” என்றும், அவர் சுட்டிக்காட்டி, “பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள” அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில் தான், இன்றைய தினம் சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் பிஏ4, பிஏ5 வகை உறுமாறிய கொரோனா தொற்று பதிவாக தொடங்கி உள்ளதாக” கூறினார்.

அத்துடன், “இந்த கொரோனா பாதிப்பு, அலை கிடையாது என்றும், சிறிய ஏற்றம் தான்” என்றும், அவர் குறிப்பிட்டார்.

மேலும், “தமிழக மக்கள் அனைவரும் அலர்ட்டாக இருக்க வேண்டும் என்றும், வரும் 12 ஆம் தேதி தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதால், அனைவருக்கும் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டார். 

முக்கியமாக, “அனைத்து இடங்களுக்கும் தேவையான தடுப்பூசி அனுப்பி உள்ளோம் என்றும், இது வரை தமிழகத்தில் 11.18 கோடி தடுப்பூசி போடப்பட்டு உள்ளது” என்றும், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தெரிவித்தார்.

அதே போல், மதுரை விமான நிலையத்திற்கு இன்று காலை வருகை தந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரணியன், அங்கு பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது, அங்கு பயணிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்யும் கருவியின் செயல்பாடுகளையும் அவர் ஆய்வு செய்தார். 

அதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அடுத்துள்ள அய்யங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் திடீர் ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின் போது, மருத்துவர் பூபேஸ்குமார் என்பவர் பணியில் இல்லாதது தெரிய வந்தது. இது தொடர்பாக, மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரித்த போது, “அவர் பணிக்கு 2 மணி நேரம் தாமதமாக வருவதாக” கூறி உள்ளனர். 

ஆனால், இது குறித்து மருத்துவர் பூபேஸ்குமார் கடிதம் எதுவும் தரவில்லை என்றும், கூறப்படுகிறது. 

இதனையடுத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட பொது சுகாதாரத்துறை இயக்குநரை செல்போனில் தொடர்புகொண்டு, “மருத்துவர் பூபேஸ்குமார் பணியில் இல்லாததும் குறித்து தெரிவித்து, அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி” அதிரடியாக உத்தரவிட்டார். இச்சம்பவம், அய்யங்கொட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது