கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் ஒரு கிடாயின் கருணை மனு. விதார்த், ரவீனா, ஜார்ஜ் மரியான் மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர். ஈராஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக கால் பதித்தார் சுரேஷ் சங்கையா. இந்தப் படத்தின் வசனங்கள் மற்றும் திரைக்கதை பல்வேறு விருதுகளை குவித்தது. 

இதனைத்தொடர்ந்து கிராமத்துப் பின்னணியில், முழுக்க காமெடி பாணியில் கதையொன்றைத் தயார் செய்தார் சுரேஷ் சங்கையா. இது கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்திய கதை என்று கூறப்படுகிறது. 

இதில் நாயகனாக பிரேம்ஜி நடித்துள்ளார். அவருடன் ஸ்வயம் சித்தா, பிக் பாஸ் ரேஷ்மா, ஞானசம்பந்தம், கே.ஜி.மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் லட்சுமி பாட்டி நடித்துள்ளார். பிரேம்ஜிக்கும் லட்சுமி பாட்டிக்கும் இடையே நடக்கும் காட்சிகள் மிக சுவாரஸ்யமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது இந்தப் படத்திற்கு சத்திய சோதனை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் மாதவன் இந்த டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டார். சரண் ஆர்வி ஒளிப்பதிவாளராக பணியாற்றும் இந்த படத்திற்கு வெங்கட் எடிட் செய்கிறார். சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பரத் ராம் இந்த படத்தை தயாரிக்கிறார். 

தமிழ் திரையுலகில் நடிகர், காமெடியன், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் பிரேம்ஜி. இசை சுனாமியான பிரேம்ஜிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் நெட்டிசன்களில் இவரும் ஒருவர். STR நடிக்கும் மாநாடு திரைப்படத்தில் நடிக்கிறார் பிரேம்ஜி.

சத்திய சோதனை படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் போய் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள அவர், கொரோனா சைனா சென்றவுடன் படத்தின் ரிலீஸ் மற்றும் பிற தகவல்களை அறிவிப்பதாக சமீபத்தில் வீடியோ ஒன்றில் தெரிவித்திருந்தார். கடைசியாக ஜாம்பி மற்றும் RK நகர் படத்தில் நடித்திருந்தார் பிரேம்ஜி. இதுதவிர்த்து பார்ட்டி படத்திற்கு இசையமைக்கிறார்.