நடிகை காஜல் அகர்வால் வளைகாப்பு! ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ
By Anand S | Galatta | February 21, 2022 13:34 PM IST

இந்திய சினிமாவின் நட்சத்திர நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட இந்திய மொழிகளில் பல முன்னணி நட்சத்திர நாயகர்களுடன் இணைந்து கதாநாயகியாகவும் முன்னணி கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.
அந்த வகையில் காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருங்காப்பியம் மற்றும் கோஷ்டி உள்ளிட்ட திரைப்படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில், நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து காஜல் அகர்வால் நடித்துள்ள ஹே சினாமிகா திரைப்படம் வருகிற மார்ச் 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மேலும் தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் ராம்சரணுடன் இணைந்து காஜல் அகர்வால் நடித்துள்ள ஆச்சாரியா திரைப்படம் வருகிற ஏப்ரல் 29-ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் பாலிவுட்டில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள உமா மற்றும் தமிழில் பாரிஸ் பாரிஸ் ஆகிய திரைப்படங்களும் விரைவில் ரிலீசாக காத்திருக்கின்றன.
முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபரான கௌதம் கிட்சுலுவை காஜல் அகர்வால் திருமணம் செய்துகொண்டார். மேலும் தற்போது நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏற்படும் மாற்றங்களை எவ்வாறு சமாளிக்க வேண்டும், உருவ கேலி செய்பவர்களை எப்படி கையாள வேண்டும் என பல முக்கிய தகவல்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு தற்போது வளைகாப்பு நடைபெற்றுள்ளது. நடிகை காஜல் அகர்வால் தனது கணவரோடு இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வளைகாப்பு நடைபெற்றுள்ளதை தெரிவித்து புகைப்படங்களை தனது ஸ்டேட்டஸில் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாக வரும் காஜல் அகர்வாலின் வளைகாப்பு புகைப்படங்கள் இதோ…