புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் பாகம் 1 படம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. தமிழ் திரையுலக வரலாற்றிலேயே முதல் படமாக IMAX தொழில்நுட்பத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வனின் முன்னணி கதாபாத்திரங்களாக ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன் என்கிற பொன்னியின் செல்வன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, சுந்தர சோழர், ஆழ்வார்க்கடியான் நம்பி, பெரிய பழுவேட்டரையர், சிறிய பழுவேட்டரையர், பூங்குழலி, மதுராந்தகன், பார்த்திபேந்திர பல்லவன், கொடும்பாளூர் வேளாளர் பூதி விக்ரம கேசரி கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரஹ்மான், விக்ரம் பிரபு, பிரபு ஆகியோர் நடித்துள்ளனர். 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தோட்டாதரணி கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்யும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

முன்னதாக பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து முதல் பாடலாக வெளிவந்த பொன்னி நதி பாடல் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது 2-வது பாடலாக சோழா சோழா பாடல் வருகிற ஆகஸ்ட் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதித்த கரிகாலனின் போர் வெற்றிப் பாடலாக வெளிவரவுள்ள சோழா சோழா பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

A victory celebration!#CholaChola the next single from #PS1 releasing on August 19th at 6PM!

🎶 - @arrahman
🎤- @dsathyaprakash, #VMMahalingam, @NakulAbhyankar
✒️ - @ilangokrishnan #PonniyinSelvan#ManiRatnam @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/HzexiM6cZk

— Madras Talkies (@MadrasTalkies_) August 17, 2022