தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழும் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது. அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, நடிகர் கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனராக பிரபலமடைந்தார் இயக்குனர் பா.ரஞ்சித்.

தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அடுத்தடுத்து கபாலி & காலா என சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பா.ரஞ்சித் , தான் இயக்கும் தயாரிக்கும் ஒவ்வொரு படங்களிலும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையும் அவர்களுக்கான நீதியையும் குறித்து பேச தவறியதே இல்லை.  இந்நிலையில் அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

வடசென்னையில் 1980-களில் நடைபெறும் குத்துச்சண்டை கலாச்சாரத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடிகர் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். மேலும் துஷாரா விஜயன், அனுபமா குமார், சஞ்சன நடராஜன், கலையரசன், ஜான் விஜய், காளி வெங்கட் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடிகர் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

ஒளிப்பதிவாளர் முரளி.ஜி ஒளிப்பதிவு செய்துள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். நீலம் புரோடக்சன்ஸ் மற்றும் K9 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது. 

வருகிற ஜூலை 22-ஆம் தேதி நேரடியாக சார்பட்டா பரம்பரை திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. எனவே அடுத்ததாக சார்பட்டா பரம்பரை படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.