தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் சூர்யா. திரைக்கு பின்னாலும் ஹீரோவாக திகழும் சூர்யா பல மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். நடிகர் சூர்யா படங்கள் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பதிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அதனால் அவரது அலுவலகம் எப்போது பிஸியாகவே எப்போதும் இயங்கி கொண்டிருக்கும். சூர்யா தன் 2டி தயாரிப்பு நிறுவனம் மூலமாக தயாரித்த பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிட கொடுத்துள்ளார். இப்படியிருக்க சூர்யாவின் அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும் எனக் கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதுகுறித்து, தேனாம்பேட்டை போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் சென்று ஆழ்வார்பேட்டையில் இயங்கி வந்த நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என உறுதி செய்யப்பட்டது. மிரட்டல் விடுத்தது யார் என்பதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார்உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த இளைஞர் புவனேஷ் (20) என்பவர்தான் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், ஏற்கெனவே முதல்வர் பழனிசாமி, நடிகர் ரஜினி உட்பட பலரது வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சிக்கியவர் எனவும் தெரிந்தது. 

அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, ஆழ்வார்பேட்டையில் இயங்கி வந்தசூர்யாவின் அலுவலகம், 6 மாதத்துக்கு முன்பே அடையாறுக்கு மாற்றப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி நடிகர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு ரஜினிகாந்த், விஜய், அஜித் என பலரது வீடுகளுக்கு சில மாதங்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது. மர்மநபர்கள் இப்படி அழைப்பு செய்து போலீசாரை அலைய விடுவதும், அதன் பின் அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி அதை பற்றி எச்சரித்து அனுப்புவதும் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கிறது.

2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார். 

ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். படத்தின் மாறா தீம் பாடல் மற்றும் வெய்யோன் சில்லி பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. 

சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ மூலம் இணையம் வழியாக 2020 அக்டோபர் 30ம் தேதி வெளியாகிறது. இத்திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும் என்று சூர்யா ஏற்கெனவே குறிப்பிட்டு இருந்தார். அதை செயல்படுத்தும் விதமாக பல்வேறு தரப்பினருக்கு உதவி செய்து வருகிறார். சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கவிருக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.