நடிகர் ஆதி, நடிகை நிக்கி கல்ராணி இணைந்து நடித்து 2017 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான காமெடி ஃபேண்டசி திரைப்படம் மரகத நாணயம். இயக்குனர்  ARK.சரவணன் எழுதி இயக்கிய திரைப்படத்தை AXESS பிலிம் பேக்டரி சார்பில் டில்லிபாபு தயாரித்திருந்தார். திபு நினன் தாமஸ் இசையமைக்க  டிவி சங்கர் ஒளிப்பதிவு செய்திருந்தார். 

ஃபேண்டசியான கதைகளத்தோடு கலக்கல் காமெடியை இணைத்து நடிகர் ஆனந்த் பாபு, MS.பாஸ்கர், காளி வெங்கட், முனிஸ்காந்த், டேனியல், அருண்ராஜா காமராஜ், கோட்டா சீனிவாசராவ் என பலரின்  ரசிக்க வைக்கும் நகைச்சுவையான நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ட்வின்கிள் ராமநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஆனந்தராஜ் கொள்ளை கூட்ட தலைவராக வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. 

சமீபத்தில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய தகவலை தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு ட்விட்டர் ஸ்பேஸில் அறிவித்திருந்தார். இதன் இரண்டாம் பாகம் கண்டிப்பாக தயாராகும் என அவர் அறிவித்திருந்த நிலையில் தற்போது இயக்குனர் ARK.சரவணன் மேலும் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ARK.சரவணன், 

“மரகத நாணயம் டு கதைக்கருவை தயாரிப்பாளர் டில்லிபாபு சாரிடம் கூறியிருக்கிறேன்.அதற்கு முன்பு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடன் விரைவில் ஒரு படத்தை துவங்க உள்ளேன். இவற்றையெல்லாம்விட கொரோனாவில் இருந்து தமிழகம் விரைவில் மீண்டு வரவேண்டும் என்பதே என் பிரார்த்தனைகள்” 

என தெரிவித்திருக்கிறார். இதனால் விரைவில் மரகதநாணயம் 2 திரைப்படம்  தயாராகும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் , சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடன் விரைவில் ARK.சரவணன் இயக்கும் மற்றொரு படம் விரைவில் துவங்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில்  கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.