இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில்  உருவாகும் புதிய ஆன்தாலஜி வெப்சீரிஸ் நவரசா. ஒன்பது எபிசோடுகள் அடங்கிய நவரசா ஆன்தாலஜி வெப்சீரிஸில்  இந்திய திரை உலகின் ஒன்பது சிறந்த இயக்குனர்கள் இயக்க பல பிரபலமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். முன்னணி இசையமைப்பாளர்களும் ஒளிப்பதிவாளர்களும் பணியாற்றும் இந்த வெப்சீரிஸ் நேரடியாக நெட்பிளிக்ஸ் OTT  தளத்தில் வெளியாக உள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களான இயக்குனர் பிரியதர்ஷன், இயக்குனர் வசந்த், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் ஹலிதா ஷமீம், இளம் தமிழ் இயக்குனர் கார்த்திக் நரேன், இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்குனர் ரதீந்திரன் ஆர்  பிரசாத் மற்றும் நடிகர் அரவிந்த்சாமி என ஒன்பது இயக்குனர்கள் இயக்கும் 9 எபிசோடில் நடிகர் சூர்யா, நடிகர் விஜய் சேதுபதி, சித்தார்த் ,அரவிந்த் சுவாமி,யோகிபாபு, ரேவதி, பார்வதி, பிரகாஷ்ராஜ், விக்ராந்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரசன்னா, நித்யாமேனன், அசோக்செல்வன், கௌதம் கார்த்திக், ரோபோ ஷங்கர், அதிதி பாலன், பாபி சிம்மா என மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களான பிசி.ஸ்ரீராம், சந்தோஷ் சிவன், பாலசுப்பிரமணியம், மனோஜ் பரமஹம்சா உள்ளிட்ட பல ஒளிப்பதிவாளர்கள்  ஒளிப்பதிவு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், ஜிப்ரான், டி.இமான் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் இசையமைக்கிறார்கள். 

மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நவரசா ஆன்தாலஜி வெப்சீரிஸ்  நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் நேரடியாக ஆகஸ்ட் மாதம் வெளியாகும்  என்ற ஒரு போஸ்டரை பிசி.ஸ்ரீராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவரசா படக்குழுவிடம் இருந்தும் நெட்பிளிக்ஸ் இடமிருந்தும் இன்னும் வெளிவராத நிலையில் பிசி.ஸ்ரீராம் பகிர்ந்துள்ள இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.விரைவில் நவரசா ரிலீஸ்  குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.