மாதவன் - ஜோதிகா - அஜய் தேவ்கன் கூட்டணியில் உருவாகும் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படம்... ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

மாதவன் ஜோதிகா அஜய் தேவ்கன் இணைந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு,madhavan jyotika ajay devgn in thriller movie release date announcement | Galatta

தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் ஃபேவரட் ஹீரோயின்களில் ஒருவராக திகழும் ஜோதிகா, கடந்த 1998 ஆம் ஆண்டு டோலி சஜா கி ரக்னா எனும் ஹிந்தி படம் மூலம் நடிகையாக களமிறங்கி, அதன் பிறகு அஜித் குமாரின் வாலி படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் அதிக கவனம் செலுத்திய நடிகை ஜோதிகா தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், அஜித் குமார், விக்ரம், சூர்யா, மாதவன், சிலம்பரசன்TR என முன்னணி நட்சத்திர நாயகர்கள் அனைவரோடும் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நாயகியாகவே வலம் வந்தார். பின்னர் திருமணத்திற்கு பிறகு சிறு இடைவெளி எடுத்துக்கொண்டு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஜோதிகா 36 வயதினிலே திரைப்படத்தில் கம் பேக் கொடுத்தார். இதனை அடுத்து வரிசையாக மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள் என தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வரும் ஜோதிகா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் உடன்பிறப்பே. 

முன்னதாக மலையாளத்தில் நடிகர் மம்முட்டி அவர்களோடு இணைந்து ஜோதிகா நடித்துள்ள காதல் தி கோர் திரைப்படம் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய ஹிந்தி சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஜோதிகா முன்னதாக நடிகர் ராஜ்குமார் ராவுடன் இணைந்து ஸ்ரீ எனும் ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். இந்த ஸ்ரீ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான குயின் மற்றும் சூப்பர் 30 உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விகாஸ் பல் இயக்கத்தில் நடிகர் மாதவன் மற்றும் அஜய் தேவ்கன் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய சூப்பர் நேச்சுரல் திரில்லர் திரைப்படத்தில் ஜோதிகாவும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழில் மாதவன் மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த டும்டும்டும் மற்றும் பிரியமான தோழி ஆகிய திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு புது படத்தில் இருவரும் இணைந்து இருப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

முன்னதாக நடிகர் மாதவன் தனது ராக்கெட்ரி திரைப்படத்தை தொடர்ந்து, புகழ்மிக்க விஞ்ஞானி ஜிடி நாயுடு அவர்களின் பயோபிக் திரைப்படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். மேலும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சசிகாந்த் முதல் முறை இயக்குனராக களமிறங்கும் தி டெஸ்ட் மற்றும் திருச்சிற்றம்பலம் படத்தின் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் புதிய படத்திலும் மாதவன் நடிக்கிறார். இயக்குனர் விகாஸ் பல் இயக்கத்தில் மாதவன் - ஜோதிகா இணைந்திருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டு மும்பை, முசூரி மற்றும் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு தேவஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். நடிகர் அஜய் தேவ்கனின் அஜய் தேவ்கன் ஃபிலிம் மற்றும் பேனரோமா ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய திரைப்படம் அடுத்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி வெளியாகும் என தற்போது பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 
 

🙏🙏🙏🙏 pic.twitter.com/wgREtuBR4j

— Ranganathan Madhavan (@ActorMadhavan) September 7, 2023