இந்திய திரை உலகின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் மாதவன் தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு & ஆங்கிலம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் மாதவன் நடிப்பில் வெளிவந்த இறுதிச்சுற்று, விக்ரம் வேதா & மாறா ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

முன்னதாக மாதவன் நடித்த DECOUPLED எனும் ஹிந்தி வெப்சீரிஸ் சில வாரங்களுக்கு முன்பு நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில் ரிலீசாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதனிடையே முதல்முறையாக நடிகர் மாதவன் தயாரித்து இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று (பிப்ரவரி 14ஆம் தேதி) வெளியானது. 

இந்தியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான திரு.நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் ராக்கெட்ரி-நம்பி விளைவு திரைப்படத்திற்கு மாதவன் திரைக்கதையும் எழுதியுள்ளார். ட்ரை கலர் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ராக்கெட்ரி திரைப்படம் தமிழ், ஹிந்தி & ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.

நம்பி நாராயணனாக மாதவன் நடிக்க, அவரது மனைவி மீனா நாராயணன் கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்துள்ளார். மேலும் ரவி ராகவேந்திரா, கார்த்திக் குமார், மோகன் ராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, நடிகர் சூர்யா மற்றும் நடிகர் ஷாரூக் கான் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள ராக்கெட்ரி படத்திற்கு ஸ்ரீஷா ரே ஒளிப்பதிவு செய்ய சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

முன்னதாக வெளிவந்த ராக்கெட்ரி திரைப்படத்தின் ட்ரைலர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் வருகிற ஜூலை 1ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ராக்கெட்ரி திரைப்படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.