“பாஜக ஆட்சியில் இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள்” என்று, பிரதமர் நரேந்தி மோடி பெருமிதத்தோடு பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்திரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த 5 மாநில தேர்தலை முன்னிட்டு தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் வரிந்துக்கட்டிக்கொண்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அதுவும், நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. 

இதில், முதல் 2 கட்டங்கள் தேர்தல் வாக்கு பதிவு முடிவடைந்த நிலையில், இன்னும் 5 கட்ட தேர்தல் நடத்த வேண்டி உள்ளது. 

அதன் படி, மார்ச் 7 ஆம் தேதி கடைசி மற்றும் 7 ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

உத்தரப் பிரதேச தேர்தலை முன்னிட்டு, அங்கு அரசியல் கட்சிகள் மிகத் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் தற்போது ஈடுபட்டு வருகின்றன. 

 “உத்தரப் பிரதேச தேர்தல் பிரசாரத்தில் இன்னொரு பரபரப்பு சம்பவமாக, “பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் இஸ்லாமிய பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பார்கள்” என்று, பாஜக எம்எல்ஏ பேசி உள்ளார். இவரது பேச்சால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அங்குள்ள டோமரியாஞ்ச் என்ற சட்டசபைத் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ராகவேந்திர சிங் என்பவர்தான் இப்படி சர்ச்சைக்குறிய வகையில் பேசியவர் ஆவர்.

அந்த வகையில், கான்பூர் தேஹாத் பகுதியில் இன்று தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியின் கீழ் தான் பாதுகாப்பாக இருப்பதாக இஸ்லாமிய பெண்கள் உணர்கிறார்கள்” என்று, பேசினார். 

மேலும், 'உத்தரப் பிரதேசத்தில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் இஸ்லாமிய பெண்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து உள்ளது” என்றும், அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், “பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை சட்டம் இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தி உள்ளது” என்றும், பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்தார்.

“அதே போல், கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு முன்பாக உத்தரப் பிரதேசத்தில் ரேஷன் கார்டு மோசடி ஒவ்வொரு நாளும் நடைபெற்றது” என்றும், பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

“இந்த மாநிலத்தில் லட்சக்கணக்கான போலி ரேஷன் கார்டுகளை அவர்கள் உருவாக்கினார்கள் என்றும், இந்த போலி ரேஷன் கார்டு திட்டத்தை இரட்டை என் ஜின் கொண்ட அரசாங்கம் தடுத்து நிறுத்தியது” என்றும், பிரதமர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, “இன்று கோடிக்கணக்கான உத்தரப் பிரதேச மக்கள் இலவசமாக ரேஷன் பொருட்களை பெற்று வருகிறார்கள் என்றும், என் ஏழை சகோதரிகள் மற்றும் தாய்மார்களின் அடுப்புகள் ஒரு போதும் அணைக்கப்படாது” என்றும், பிரதமர் மோடி நம்பிக்கையோடு பேசினார்.

இதனிடையே, “பாஜக ஆட்சியில் இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள்” என்று, பிரதமர் நரேந்தி மோடி பெருமிதத்தோடு பேசியதை, இணையவாசிகள் பலரும் டிரோல் செய்து வருகின்றனர். இதனால், பிரதமர் மோடி இஸ்லாமிய பெண்கள் பற்றி பேசியது, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.