தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை ஆனந்தி, இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் வெளிவந்த பொறியாளன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த கயல் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

அதன் பின்னர் கயல் ஆனந்தி ஆக வலம் வரும் நடிகை ஆனந்தி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். குறிப்பாக தமிழில் த்ரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, பண்டிகை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஆனந்தி தெலுங்கில் பஸ் ஸ்டாப், கிரீன் சிக்னல், சாம்பி ரெட்டி, ஸ்ரீதேவி சோடா சென்டர் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

கடைசியாக கயல் ஆனந்தி நடிப்பில் கடந்த ஆண்டு (2021) வெளிவந்த கமலி FROM நடுக்காவேரி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, தற்போது தெலுங்கில் இட்லு மரேடும்மிலி ப்ரஜநீக்கம் படத்தில் நடித்து வருகிறார். இந்த வரிசையில் அடுத்ததாக தமிழில் கயல் ஆனந்தி நடிக்கும் திரைப்படம் ஒயிட் ரோஸ்.

அறிமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில், பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான R.K.சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒயிட் ரோஸ் படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மற்றொரு முன்னணி கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் ரூஸோ நடிக்க, ஓய்வு பெற்ற தமிழக காவல்துறை அதிகாரியான S.R.ஜங்கீத் அவர்கள் முக்கியமான கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.

சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக தயாராகும் ஒயிட் ரோஸ் படத்திற்கு உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய ஜோஹன் சிவனேஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் ஒயிட் ரோஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (மே 23-ஆம் தேதி) பூஜையுடன் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒயிட் ரோஸ் படத்தின் படப் பூஜை புகைப்படங்கள் இதோ…