கடந்த 2017-ம் ஆண்டு புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். Y Not சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் அனைத்து ரீமேக் உரிமைகளும் தயாரிப்பாளர் சஷிகாந்திடம் தான் இருக்கிறது. இந்தியில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து சஷிகாந்த் தயாரிக்கப் பணிகள் தொடங்கப்பட்டன. புஷ்கர் - காயத்ரி இருவருமே இயக்க ஒப்பந்தமானார்கள். இந்தப் படத்தின் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. 

முதலில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்குத் தான் முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஷாரூக் கான், ஹ்ரித்திக் ரோஷன் ஆகிய இருவரிடமும் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இறுதியில் ஆமிர் கானிடம் நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், திரைக்கதையில் திருப்தியில்லை என்று விலகிவிட்டார். இதனால் விக்ரம் வேதா இந்தி ரீமேக் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டது. 

தற்போது மீண்டும் ஹிரித்திக் ரோஷனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுகமான கட்டத்தை எட்டியுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியாகி வருகிறது. அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வேதாவாக ஹிரித்திக் ரோஷனை காண ஆவலாக உள்ளனர் பாலிவுட் ரசிகர்கள். 

மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான் நடிப்பது முன்னரே உறுதியாகிவிட்டது. விரைவில் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இறுதியானவுடன், படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.