இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் முதன் முதலில் கதாநாயகனாக நடித்த திரைப்படம் விண்ணை தாண்டி வருவாயா. கார்த்திக் கதாபாத்திரத்தில் நடிகர் சிலம்பரசனும், ஜெஸ்ஸி கதாபாத்திரத்தில்  நடிகை திரிஷாவும் நடித்து ரொமாண்டிக் காதல் திரைப்படமாக வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

கௌதம் வாசுதேவ் மேனன் திரைப்படங்கள் என்றாலே காதலும் காதல் காட்சிகளும் பாடல்களும் ரசிகர்களை காந்தம் போல் ஈர்க்கும் அதிலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உடன் இணைந்தால் வேற லெவல் தான். முதல் முறையாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்- இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்- சிலம்பரசன் கூட்டணியில் உருவான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை அடுத்து இந்த கூட்டணி மீண்டும் அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் இணைந்தது.
 
தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் இந்த கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் நதிகளிலே நீராடும் சூரியன். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் Dr.ஐசரி.கே.கணேஷ் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க பாடலாசிரியர் தாமரை பாடல்களை எழுதியுள்ளார். 

இந்நிலையில் நதிகளிலே நீராடும் சூரியன் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்க உள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு பத்து நாட்கள் நடைபெறும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேசன் அவர்கள் கலாட்டா குழுமத்துடன் இத்தகவலை பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.