இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து என்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் கௌதம் கார்த்திக். அடுத்ததாக பத்து தல திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன்.TR உடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். 

மேலும் ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்திலும் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில், தற்போது இருவரும் தங்களது காதலை உறுதிப்படுத்தி தங்களது சமூக வலைதளங்களில் வாயிலாக அனைவருக்கும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து சத்ரியன், துக்ளக் தர்பார், FIR உள்ளிட்டா பல படங்களில் நடித்துள்ள நடிகை மஞ்சிமா மோகன் தேவராட்டம் திரைப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து நடித்துள்ளார். அந்த சமயத்தில் இருந்தே இருவரும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் பரவி வந்த நிலையில், சமீபத்தில் இருவரும் தங்களது காதலை உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில் இவர்களது திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் தங்களது திருமணம் வருகிற நவம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இவர்களது திருமணத்திற்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.