தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் நாரப்பா. நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக வெளிவந்த நாரப்பா தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

முன்னதாக மலையாளத்தில், மோகன்லால் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் திரைப்படம் இந்தியாவின் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், தெலுங்கு ரீமேக்கில் நடிகர் வெங்கடேஷ் நடித்திருந்தார். அந்த வகையில் தொடர்ந்து த்ரிஷ்யம் 2 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் வெங்கடேஷ் நடித்துள்ளார்.

சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆசிர்வாத் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ள த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக் படத்தையும் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். வெங்கடேஷ், மீனா, நதியா, கிருத்திகா, எஸ்தர் அனில், சம்பத், நரேஷ், தனிக்கெல்லா பரணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள த்ரிஷ்யம் 2 படத்திற்கு சதிஷ் குருப் ஒளிப்பதிவு செய்ய, அனுப் ருபன்ஸ் இசையமைத்துள்ளார்.

நாரப்பா திரைப்படத்தை தொடர்ந்து வெங்கடேஷின் த்ரிஷ்யம் 2 திரைப்படமும் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாகிறது. வருகிற நவம்பர் 25ஆம் தேதி ரிலீசாகவுள்ள த்ரிஷ்யம் 2 திரைப்படத்தின் விறுவிறுப்பான டிரைலர் தற்போது வெளியானது. த்ரிஷ்யம் 2 ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.