“வக்கிரபுத்தி கொண்டவர்களை சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை விட, அவர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்று, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கொந்தளித்து உள்ளார்.

கோவையில் பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால், பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு, தமிழகம் முழுவதிலிருந்தும் கடும் கண்டன குரல்கள் எழுந்தன.

இதனையடுத்து, அந்த பள்ளியின் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் அந்தப் பள்ளியின் முதல்வர் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

இதனையடுத்து, கோவை காளப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கணினி ஆய்வகத்தைக் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தபோது பேசிய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “கோவை 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில், பள்ளி நிர்வாகம் மழுப்பலான பதில் அளித்துள்ளதாக” குற்றம்சாட்டினார்.

“12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் உடனடியாக முதன்மை மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி உள்ளார் என்றும், ஆனால் பள்ளி நிர்வாகம் மழுப்பலான பதில் அளித்து உள்ளது என்றும், அது திருப்திகரமாக இல்லை என்பதால் அதற்குள் காவல் துறை துரிதமாக நடவடிக்கை எடுத்தது” என்றும், அவர் தெரிவித்தார்.

மேலும், “குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கபடுவார்கள் என்றும், போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளதால் தற்போது தமிழக அரசின் உதவி எண்ணான 14417 என்ற எண்ணிற்கு பாதிக்கப்பட்ட மாணவிகள் அழைத்து புகார் தெரிவிக்கலாம்” என்றும், பேசினார்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வரும் எம்.எஸ். பாஸ்கர், இது தொடர்பாக தனது ஆதங்கத்தை தெரிவித்து உள்ளார்.

அதில், “இதற்கு முன்பு சென்னையில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை. மற்றுமொரு தனியார் பள்ளியில் சின்னஞ்சிறு மழலைகளை ஒரு ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கும் வீடியோ. தற்போது கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் அந்த மாணவி தாள முடியாத மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை. என்ன நடக்கிறது பள்ளிகளில்? குழந்தைகள் படிப்பதா இல்லையா?” என்று, காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

குறிப்பாக, “சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை விட, கடுமையான தண்டனை அவர்களுக்கு வழங்கப்பட்டே ஆக வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது” என்றும், நடிகர் எம்.எஸ். பாஸ்கர் வலியுறுத்தி உள்ளார்.

மேலும், “இப்படிப்பட்ட கயவர்களுக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராகக்கூடாது என்றும், அந்த வக்கிரபுத்தி கொண்டவர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கப்பட்டே ஆக வேண்டும் என்றும், அதுவும் விரைவாக வழங்க வேண்டும் என்றும், இதுவே என் வேண்டுகோள்” என்றும், தனது ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார்.