நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அனைத்து தரப்பினரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக திரையுலகை சேர்ந்தவர்களும் தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்கள்.

இந்திய திரைத்துறையின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ். இயக்குனர் மட்டுமல்லாது தயாரிப்பாளர், கதாசிரியர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பணியாற்றியுள்ளார். ராஜ பார்வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் என தமிழில், கமல்ஹாசானுடன் சேர்ந்து இவர் எடுத்திருக்கும் திரைப்படங்கள் அனைத்துமே இன்றளவும் பிரபலமானவை. 

வரும் 21-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், தற்போது தனக்கு கரோனா தொற்று இருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளார். 21-ஆம் தேதி என் பிறந்தநாள் குறித்துப் பேச பலர் என்னை தொடர்பு கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஊடகத்தைச் சேர்ந்தவர்களும் என்னைத் தொடர்பு கொண்டனர். அவர்கள் அழைப்பை என்னால் ஏற்க முடியவில்லை. ஏனென்றால் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மிகவும் லேசான அறிகுறிகள் தான் இருந்தன. சிடி ஸ்கேனிலும் தொற்றின் அளவு மிகக் குறைவாக இருப்பதாகவே தெரிய வந்துள்ளது. இப்போது வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். தனி அறையில், எனக்கென தனியாக குளியலறை, கழிவறையோடு இருக்கிறேன். உணவை வெளியே வைத்துவிடுவார்கள். நான் எடுத்துக் கொள்வேன். எனது கல்லூரி விடுதி நாட்கள் நினைவுக்கு வருகிறது.

எல்லாம் நலமாகவே இருக்கிறது. 22-ம் தேதி வரை இந்த வீட்டுத் தனிமை நீடிக்கும். நான் இங்கு தனியே புத்தகங்கள் படித்து, திரைக்கதை வேலைகள் செய்து நேரம் கழிக்கிறேன். என்னைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் அனைவருக்கும் நன்றி. என் பிறந்தநாளுக்காக எதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் நன்றி. கோவிட்-19 என்பது தீவிரமான தொற்று. அனைவரும் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முகக் கவசம், சமூக விலகலை என எல்லாவற்றையும் பின்பற்ற வேண்டும். நான் எல்லாவற்றையும் பின்பற்றியும் எனக்கு தொற்று வந்திருக்கிறது.

ஆனால் மனித இனம் எப்போதுமே இது போன்ற நோய் தொற்றுகளிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. வரலாற்றில் எப்போதும் அப்படியே நடந்திருக்கிறது. எனவே அனைவரும் நலம் பெறுவோம். நன்றி என சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் முகநூல் வீடியோ பதிவில் பேசியுள்ளார். சமீபத்தில் கூட இவர் இயக்கிய மைக்கேல் மதன காமராஜன் படத்தை பார்த்து நடிகர் பிரித்விராஜ் பாராட்டியிருந்தார். இவர் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என திரை ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.