கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களை போல் அல்லாமல் இந்த சட்டமன்ற தேர்தல் தமிழக தேர்தல் களத்தை புதிய வகையில் அமையவிருக்கிறது. காரணம், இத்தனை ஆண்டுகள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துக் கொண்டிருந்த கலைஞர், ஜெயலலிதா இல்லாமல் இந்த முறை திமுகவா? அதிமுகவா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. கூடவே முதல்வர் வேட்பாளர்களுக்கான பட்டியலும் நீண்டு வருகிறது. 

ரஜினி, கமல் போன்ரோர் முதல்வர் வேட்பாளர்களாக களம் இறங்கினால் என்ன ஆகும் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. 

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தாலும் தற்போது வரை அக்கட்சியில் முதல்வர் வேட்பாளர் யாரென்றபது சர்ச்சையாகவே நீடிக்கிறது. அதிமுகவுடன் தற்போது கூட்டணியில் இருக்கும் பாஜக, தேமுதிக போன்ற கட்சிகளும்கூட, வரும் தேர்தலில் கூட்டணியில் தேர்தலை சந்திக்குமா அல்லது தனித்து செயல்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதே போல் ஸ்டாலின் திமுக தலைவராக இருந்தாலும் உட்கட்சி பூசல்கள் அங்கு ஏராளமாக இருக்கிறது. இதனால் தேர்தல் வியூகம், பிரச்சாரம், கூட்டணி பலம், தேர்தல் பணி போன்றவைகள் தான் சட்டமன்ற தேர்தலில் ஒரு கட்சிக்கு வெற்றி வாய்ப்பை கொடுக்கப்போகிறது என்பது தெளிவாகிறது. அதிலும் கூட்டணி வியூகம் என்பது இந்த தேர்தலில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒரு கட்சியுடனான கூட்டணி மூலம் ஒரு தொகுதிக்கு வெறும் 1000 வாக்குகள் கிடைக்கும் என்றால் கூட அந்த கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள திமுகவும் சரி, அதிமுகவும் சரி தயாராக உள்ளன.

இந்நிலையில் அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ``விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எங்களுக்கு எந்த பகையும் இல்லை" என கூறியிருந்தது அரசியல் அரங்கில் விவாதத்தை உண்டாக்கியது. இதனால் பாமக, விசிக கட்சிகள் ஒரே கூட்டணிக்குள் இடம்பெறுமா என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன.

இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 16) நாளிதழ் ஒன்றுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், “பாமகவுடன் கூட்டணி அமைப்பது மிகப்பெரிய சமரசமாகவும், சந்தப்பவாதமாகவும் அதே சமயம் முட்டாள்தனமாகவும் இருக்கும். சாதக, பாதக அம்சங்களை அமைதியாகவும் தீவிரமாகவும் ஆராய்ந்த பின்னரே பாமகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்தோம்” என்று தெரிவித்தார். ராமதாஸுடன் தனக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை எனவும், ஐந்து ஆண்டுகள் தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் தாங்கள் இருவரும் நெருங்கி பணியாற்றியதாகவும் திருமாவளவன் விளக்கினார்.

விசிக அல்லது வேறு எந்த கட்சியுடனும் தங்களுக்கு பகையில்லை என ராமதாஸ் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, அதனை அர்த்தமற்றதாக உணர்ந்ததாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். “ராமதாஸ் ஆரம்பத்தில் புரட்சிகர சக்தியாக வலம்வந்தார். தமிழ் கலாச்சாரம், மக்கள், சமூக நீதிக்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுத்தார். தன்னை அம்பேக்கரியவாதியாக, பெரியாரியவாதியாக, மார்க்சியவாதியாக அடையாளப்படுத்தினார். அதன் அடிப்படையில் அவருடன் அரசியலில் இணைந்து பணியாற்ற விரும்பினோம். ஆனால், மீண்டும் அவர் சாதிய சக்தியாக மாறிவிட்டார்” என்று சாடினார்.

மேலும், அரசியல் லாபத்துக்காக சாதியை துருப்புச்சீட்டாக பயன்படுத்துவதாக ராமதாஸ் மீது திருமாவளவன் குற்றம்சாட்டினார். “ராமதாஸ் அரசியல் செல்வாக்கை இழக்கும்போதெல்லாம், அவர் மீண்டும் சாதி அரசியலுக்கு செல்கிறார். தொழிலாளர் வர்க்கங்களான தலித் அல்லாதவர்கள் மற்றும் தலித்துகள் இடையிலான வேறுபாடுகளை கூர்மைப்படுத்துகிறார். அவர் தலித்துகளுக்கும் தலித் அல்லாதவர்களுக்கும் இடையிலான பிளவுகளை உருவாக்குகிறார் என்று நான் கூறவில்லை - சாதி காரணமாக சமூகத்தில் பிளவு ஏற்கனவே உள்ளது. ஆனால், அவர் சாதி மோதலை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகிறார். இது ஆபத்தானது - மக்களிடையே உள்ள வேறுபாடுகளை அகற்ற நாம் பணியாற்ற வேண்டும்” என்று தனது பேட்டியில் வலியுறுத்தினார்.