கொரோனா தொடங்கிய காலத்திலிருந்தே, இந்தியாவில் மருத்துவ பிரச்னைகளுக்கு ஈடுகொடுத்து, இந்திய பொருளாதாரமும் ஆட்டம் கண்டு வருகின்றது.

அதன் ஒருபகுதியாக வரும் நடப்பு 2020-21 (FY21) நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9 சதவீதம் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது என்று ஆசிய அபிவிருத்தி வங்கி (Asian Development Bank) கணித்துள்ளது.

இந்த வங்கி, நேற்றைய தினம் (செவ்வாய்) வெளியிட்ட அறிக்கையில், கொரோனா வைரஸால் இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளது. இது நுகர்வோர் உணர்வையும் பாதித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஒன்பது சதவீதம் சரிவு ஏற்படும் என்று அது எச்சரித்துள்ளது. இருப்பினும், அடுத்த நிதியாண்டில் 2021-22 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு பெரிய ஏற்றம் இருக்கும் என்று ADB மதிப்பிடுகிறது. அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருக்கும் என்று ADB தெரிவித்துள்ளது.

இந்த வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் யசுயுகி சவாடா இதுபற்றி கூறுகையில், "தொற்றுநோய் பரவாமல் தடுக்க இந்தியா கடுமையான பூட்டுதலை விதித்தது. இது பொருளாதார நடவடிக்கைகளை கடுமையாக பாதித்துள்ளது. அடுத்த நிதியாண்டிலும் அதற்கு அப்பாலும் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும், விசாரிக்கவும், கண்காணிக்கவும் மற்றும் சிகிச்சையளிக்கவும் திறனின் விரிவாக்கம் முக்கியமானது. இந்த நடவடிக்கைகள் திறம்பட செயல்படுத்தப்பட வேண்டும், அப்போதுதான் பொருளாதாரம் மீட்கப்படும்" என்றார். 

இதேபோல, கொரோனா நோய் தொற்று மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாக, நாட்டின் ஜிடிபி நெகட்டிவ் நிலைக்கு செல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இதை வெளிப்படையாகவே செய்தியாளர் பேட்டியிலும் தெரிவித்தார்.

இந்த தாக்கம் இப்போதே தெரிய ஆரம்பித்துள்ளது. ஏற்றுமதி தொடர்ந்து சரிந்து வருகிறது. பெட்ரோலியம், தோல், பொறியியல் பொருட்கள் மற்றும் கற்கள் மற்றும் நகைப் பொருட்களின் ஏற்றுமதி குறைந்து வருவதால், ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 12.66 சதவீதம் சரிந்து 22.7 பில்லியன் டாலராக இருந்தது என்று அரசு நேற்று வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், நாட்டின் இறக்குமதியும் ஆகஸ்ட் மாதத்தில் 26 சதவீதம் குறைந்து 29.47 பில்லியன் டாலராக இருந்தது. இதன் அர்த்தம் என்னவென்றால், உள் நாட்டிலும் நுகர்வு குறைந்துள்ளது என்பதுதான். மக்கள் கையில் பணப் புழக்கம் குறைவாக இருப்பதுதான் இதுபோன்ற நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இறக்குமதி குறைந்துள்ளதால் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் வர்த்தக பற்றாக்குறையை 6.77 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 13.86 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு இருந்தது.

எண்ணெய் இறக்குமதி 41.62 சதவீதம் குறைந்து 6.42 பில்லியன் டாலராக உள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்டில் தங்க இறக்குமதி 3.7 பில்லியன் டாலராக உயர்ந்தது, இது 2019 ஆகஸ்டில் 1.36 பில்லியன் டாலராக இருந்தது. ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில், ஏற்றுமதி 26.65 சதவீதம் குறைந்து, 97.66 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 43.73 சதவீதம் குறைந்து 118.38 பில்லியன் டாலராகவும் உள்ளது. இந்த காலகட்டத்தில் வர்த்தக பற்றாக்குறை 20.72 பில்லியன் டாலராக இருந்தது.

இருப்பினும், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரம் முழுமையாக மீளவில்லை என்று அவர் கூறியுள்ளார். அதன்படி, ``நாட்டின் பொருளாதாரத்தில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு தான், முதல் காலாண்டில், கடுமையாக பாதிப்பு ஏற்படுத்தியது. சில துறைகளில், கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் காணப்பட்ட பிரச்னைகள் சரி செய்யப்பட்டுள்ளது.

தற்போது, கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையிலும், பொருளாதாரம் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக உயரும். சில துறைகளில் காணப்பட்ட முரண்பாடுகள், எளிமைபடுத்தப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த தேவையான நடவடிக்கையை எடுக்க ரிசர்வ் வங்கி தயாராக உள்ளது" என்று கூறியிருக்கிறார் அவர்.