மனைவியை கொடுமைப் படுத்திய மருமகன் திருந்தாத நிலையில், மகளின் வாழ்க்கை பாலாகி விட்டதே என்று மனம் நொந்துகொண்ட மாமனார் தற்கொலை செய்துகொண்டதால், தந்தையின் உயிர் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாத பாச மகள்கள் இருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குடும்பத்தையே சிதைத்த இப்படி ஒரு கொடுமையான சம்பவம் ஆந்திர மாநிலத்தில் தான் அரங்கேறி உள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரைச் சேர்ந்த பாபு ரெட்டி - விஜய பராதி தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். 

இதில், மூத்த மகள் ஸ்வேதாவுக்கு 26 வயது ஆகும் நிலையில், இளைய மகள் சாயி என்பவருக்கு 20 வயது மட்டுமே ஆகிறது. தந்தை மீது மகள்களும், மகள்கள் மீது தந்தையும் அளவு கடந்த பாசம் வைத்து, இருவரையும் மிகவும் செல்லமாகவே வளர்த்து வந்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், காண்டிரக்டரான பாபு ரெட்டி, தனது மூத்த மகள் ஸ்வேதாவை, அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவருக்கு 16 லட்சம் ரூபாய் வரதட்சணையாகக் கொடுத்து, திருமணம் செய்து வைத்து உள்ளார். 

மாப்பிள்ளை சுரேஷ் குமார், அங்குள்ள நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் இன்ஜீனியர் வேலை பார்த்து வருவதாகக் கூறி வந்திருக்கிறார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு, மாப்பிள்ளை சுரேஷ் குமார் வேலைக்குச் செல்லாமல் வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டு வந்திருக்கிறார். இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்து உள்ளது.

இப்படி ஒவ்வொரு முறை சண்டை வரும் போதும், மகள் ஸ்வேதா, தன் தந்தைக்கு போன் செய்து சொல்வது வழக்கம். அப்படி சண்டை வரும் போதெல்லாம் தந்தை பாபு ரெட்டி, மகள் வீட்டிற்கு வந்து மாப்பிள்ளையையும் - மகளையும் சமாதானம் செய்து வைத்து விட்டு அறிவுரையும் கூறி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.

ஆனால், கணவன் - மனைவி இடையேயான சண்டை நிற்காமல் தொடர்ந்து அதிகமானதால், ஒரு கட்டத்தில் மாப்பிள்ளை சுரேஷ் குமார், தினமும் குடித்து விட்டு வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்து உள்ளார். இதனால், மேலும் சண்டை வரும் போது, மனைவியை அடித்துத் துன்புறுத்தத் தொடங்கி உள்ளார். 

அப்போதும், மகள் தனது தந்தைக்கு போன் செய்து கணவனின் குடிப்பழக்கம் குறித்தும், குடித்துவிட்டு தன்னை அடிப்பது குறித்தும் கூறி அழுது உள்ளார்.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான தந்தை பாபு, மீண்டும் மாப்பிள்ளையைச் சமாதானம் செய்து விட்டுச் சென்று விட்டார். ஆனால், அதன் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் மனைவியை அடித்து உதைத்து வரதட்சணை கேட்டு, மனைவியை வீட்டை விட்டு விரட்டி அடித்து உள்ளார். இதனால், வெறும் கையுடன் மகள் வீடு திரும்பி உள்ளார்.

இதன் காரணமாக, “தன் மகளின் வாழ்க்கையை நானே நாமாக்கி விட்டேனே” என்று புலம்ப தள்ளி இருக்கிறார் தந்தை பாபு ரெட்டி. அத்துடன், மாப்பிள்ளையிடம் மாமானர் கெஞ்சிக் கேட்டும் அவர் தன் மனைவியை ஏற்க தயாராக இல்லை. இதனால், அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், தன் மகளின் வாழ்க்கை காவல் நிலையம் செல்லும் அளவுக்கு மோசமாகி விட்டதே என்று கலங்கிய தந்தை பாபு, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, கடந்த 7 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலைக்கு முன்பாக, பாபு ரெட்டி எழுதிய கடிதத்தில், “என் தற்கொலைக்கு என் மாப்பிள்ளை சுரேஷ் குமார் தான் காரணம்” என்று கடிதம் ஒன்றையும் எழுதி வைத்து விட்டு உயிர் விட்டார். இது குறித்து விரைந்து வந்த போலீசார் கடிதத்தை கைப் பற்றி மாப்பிள்ளை சுரேஷ் குமார் மீது வழக்குப் பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அத்துடன், தந்தை இறந்த சோகத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத அவர் மகள்கள் ஸ்வேதா மற்றும் சாய் ஆகிய இருவரும் அந்த பகுதியில் உள்ள ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். கணவனைத் தொடர்ந்து, தன் மகள்கள் இருவரும் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டதால், தாய் விஜய பாரதி பித்துப் பிடித்தார் போல் மாறி காணப்படுகிறார். 

இது தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்த போலீசார், சுரேஷ் குமாரை கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாப்பிள்ளையின் தவறான செயல்களால், ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 3 பேர் தற்கொலை செய்துகொண்டதால், அந்த குடும்பமே தற்போது சிதைந்து போய் உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.