புதுக்கோட்டையில் சிறுமி மற்றும் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான ரகுபதி என்ற இளைஞன், புதுக்கோட்டையில் உள்ள தனியார் கேபிள் டி.வி.யில் பணியாற்றி வந்தார்.

அப்போது, புதுக்கோட்டையில் உள்ள திலகர் திடல் பகுதியில் உள்ள காம்ப்ளக்ஸில் கேபிள் வேலை பார்க்கச் சென்று உள்ளார்.

அந்த காம்ப்ளக்ஸில் சில குடும்பத்தினரும் வசித்து வந்து உள்ளனர். அப்போது, கேபிள் பணிக்குச் சென்ற ரகுபதி, கேபிள் வயரை இழுத்துப் பிடிப்பதற்காக அங்கு வசித்து வந்த 10 வயது சிறுவன் மற்றும் 8 வயது சிறுமி ஆகிய இருவரையும் உதவிக்கு அழைத்து உள்ளார்.

அதன்படி, அந்த சிறுவர் - சிறுமி இருவரும் வந்து ரகுபதிக்கு உதவி செய்து உள்ளனர். அந்த நேரம் பார்த்து, அவர்கள் மீது சபலப்பட்ட ரகுபதி, அந்த சிறுவனுக்கும், சிறுமிக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால், இருவரும் வலியால் கத்தி உள்ளனர். 

சிறுவர்கள் இருவரும் சத்தம் போட்டு கத்தியதால், பயந்து போன ரகுபதி, அவர்களை விடுவித்து உள்ளான். அதன் பிறகு அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்ற அந்த 10 வயது சிறுவன், தனக்குச் நேர்ந்த பாலியல் அத்துமீறல் குறித்து தனது தந்தையிடம் கூறி உள்ளான். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், பக்கத்தில் வசிக்கும் தனது உறவினர்களை அழைத்துக்கொண்டு, ரகுபதியை துரத்திப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

அதன் தொடர்ச்சியாக, அந்த பகுதி மக்கள் கூடிய நிலையில், ரகுபதியை அங்குள்ள புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் ரகுபதியை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தான் செய்த தவறை ரகுபதி ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.

மேலும், இது தொடர்பான வழக்கு, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்த வழக்கில் நீதிபதி சத்யா தீர்வை அறிவித்தார். அதில், 8 வயது சிறுமி மற்றும் 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக, குற்றவாளி ரகுபதிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

தீர்ப்புக்குப் பிறகு, குற்றவாளி ரகுபதியை போலீசார், பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்தியச் சிறைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, சிறுவர் - சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையிலும், இது போன்ற குற்றங்கள் குறையாமல் தொடர்ந்து நடைபெறுவது தான் வேதனையான ஒன்றாகவே இருக்கிறது.