தமிழக சட்டப்பேரவை கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் உள்ள 3-வது தளத்தில் செப் 14 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்நாள் கூட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு முதல்வர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மாஸ்க் அணிந்து பேரவையில் பங்கேற்றனர். 

குறிப்பாக எதிர்க்கட்சி சார்பாக Ban NEET, Save TN Students என நீட் தேர்வுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய மாஸ்க்குடன் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் பங்கேற்றனர்ம்

முதல் நாள் இப்படி தொடங்கிய சட்டப்பேரவை, அடுத்த நாளாக நேற்றைய தினம் நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசை எதிர்த்தும், மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை கண்டித்தும் தமிழக சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்த விவாதத்தின்போது திமுக- அதிமுக இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதே நேரத்தில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக காங்கிரசை தொடர்புபடுத்தி அதிமுக கூறிய குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

நேற்றைய தினம் தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு பேசினார். அப்போது அவர், ``அரியலூர் அனிதா முதல், திருச்செங்கோடு மோதிலால் வரை, பல மாணவ, மாணவிகள் `நீட்’ தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக உள்ளிட்ட அனைவருமே தொடர்ந்து மத்திய அரசை வற்புறுத்தி வருகிறோம். இதே பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக - மாணவர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் விலக்கு கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். ஆனால் இந்த அவையின் உணர்வுகளை மத்திய அரசு கிஞ்சித்தும் மதிக்கவில்லை. அனுப்பிய மசோதாக்களுக்கும் இதுவரை ஒப்புதல் வாங்கிடவில்லை.

செப்டம்பர் 12ம் தேதி, அதாவது நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மதுரை ஜோதி ஸ்ரீதுர்கா, தர்மபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால் என மூன்று மாணவ - மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். ஆகவே தமிழக சட்டமன்றத்தையும், தமிழக மாணவர்களின் உணர்வுகளையும் மதிக்காத, நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யாத மத்திய அரசை எதிர்த்தும், நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக அரசு கேட்கவில்லை என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை கண்டித்தும் கண்டன தீர்மானம் நாம் கொண்டு வர வேண்டும். பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவ கல்வியில் சேர்க்கை நடைபெறுவதை அரசு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு திமுக உறுதுணையாக இருக்கும்.

நீட் விவகாரத்தில் கட்சி பாகுபாடின்றி போராட அனைவரும் தயார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை வந்தபோது, முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பேசினார். சட்ட முன்வடிவை உருவாக்கி, அதை தீர்மானமாக கொண்டுவந்து நிறைவேற்றினார். அதுபோலத்தான், திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வோம்" என்றார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ``ஜல்லிக்கட்டு தமிழகத்திற்கு மட்டுமான நிகழ்வு. அது ஒரு மாநிலத்தை சார்ந்த பிரச்னை. நீட் அப்படி அல்ல. தேசிய அளவிலான பிரச்னை. எத்தனையோ மாநிலங்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், தமிழகம் மட்டும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது" என்று பதிலளித்தார். மேலும் அவர், ``நீட் தேர்வை தடுக்கும் வழி தங்களுக்கு தெரியுமென திமுக சொல்கிறது. அந்த வழியை அவர்கள் கூறினால், நிச்சயம் இந்த அரசு அதை உடனடியாக நடைமுறைப்படுத்தும்" என்றும் கூறினார்.

இப்படி காரசாரமாக நேற்றைய விவாதம் நடந்தது. 

இந்நிலையில், இன்று இறுதி நாளாக சட்டப்பேரவை நடந்தது. அப்போது புதிய கல்விக் கொள்கை குறித்து அரசு விவாதிக்க மறுப்பதாகக் கூறி சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்து விவாதித்து, பேரவையில் கல்விக் கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், திமுக எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தேசிய கல்விக் கொள்கையில் இருக்கும் பாதகமான அம்சங்கள் பற்றி விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற நாளை சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று திமுக கோரிக்கை வைத்தது. ஆனால், தேசியக் கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு சார்பில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக முதல்வர் பழனிசாமி பதில் அளித்தார். முதல்வரின் பதிலை ஏற்க மறுத்த திமுக எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்