ஒட்டு மொத்த இந்திய சினிமாவின் கவனத்தையும் மலையாள சினிமாவின் பக்கம் திருப்பிய பிரேமம் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகை தாண்டி பிறமொழி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தவர் நடிகர் நிவின் பாலி.

தொடர்ந்து மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் உருவான துறமுகம் மற்றும் மஹாவீரயர் ஆகிய திரைப்படங்களின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த இரு படங்களும் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அடுத்ததாக மலையாளத்தில் படவெட்டு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

முன்னதாக தமிழில் நேரம் & ரிச்சி ஆகிய படங்களில் நடித்த நிவின் பாலி அடுத்ததாக கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி என சிறந்த படைப்புகளை வழங்கி வரும் தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் ராம் இயக்கத்தில் புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

நிவின் பாலியுடன் இணைந்து அஞ்சலி மற்றும் சூரி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முற்றிலும் நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.