தமிழகத்தில் மீண்டும் பற்ற தொடங்கியுள்ளது ஹிந்தி திணிப்பு பிரச்சனை. முன்னதாக டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்றத்தின் அலுவல் மொழி குழுவின் 37வது கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கிலத்திற்கு மாற்று ஹிந்தி தான், ஹிந்தி பேசாத மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதற்கு பதிலாக ஹிந்தி பேச வேண்டும் என பேசினார்.

மேலும் ஹிந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் எனவும் ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக ஹிந்தி ஏறிக்கொண்டு வர வேண்டிய தருணம் வந்து விட்டதாகவும் தெரிவித்தார். அமித்ஷாவின் இந்த பேச்சு மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. தொடர்ந்து பல முன்னணி அரசியல்வாதிகளும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும் அமித்ஷாவின் பேச்சை எதிர்த்து தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

அந்தவகையில் இசைப்புயல் A.R.ரஹ்மான் தமிழன்னையின் ஓவியத்தை தமிழணங்கு என குறிப்பிட்டு தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்தார். மேலும் செய்தியாளர்கள் அமித்ஷாவின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பிய போது தமிழும் இணைப்பு மொழிதான் தமிழால் இணைவோம் என பதிலளித்தார். ஹிந்தி திணிப்பு குறித்து உறக்க பேசிய இசைப்புயல் A.R.ரஹ்மானின் இந்த கருத்துகள் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் A.R.ரஹ்மானை தொடர்ந்து ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மொழிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன் மற்றும் முன்னணி இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கங்களில் “தமிழால் இணைவோம்” என ட்விட் செய்துள்ளனர்.