கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இன்று தமிழ் திரையுலகின் ஆகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் இயக்குனர் ராம். இவரது இயக்கத்தில் வெளிவந்த தங்கமீன்கள் திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக வசந்த் ரவி மற்றும் ஆண்ட்ரியா இணைந்து நடித்த தரமணி மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த பேரன்பு என இயக்குனர் ராம் இயக்கிய திரைப்படங்கள் தமிழ் சினிமா வரலாற்றில் இடம் பிடிக்கும் முக்கிய திரைப்படங்களாக கவனிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து தனது புதிய திரைப்படத்தை தற்போது தொடங்கியுள்ளார் இயக்குனர் ராம்.

முன்னணி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் மலையாள நடிகர் நிவின்பாலி மற்றும் நடிகை அஞ்சலி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் ராம் எழுதி இயக்கும் இத்திரைப்படத்திற்கு ராமின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் N.K.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடியில் இயக்குனர் ராம், நிவின்பாலி, நடிகை அஞ்சலி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் படக்குழுவினருடன் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.