படத்திற்கு படம் சிறந்த கதாபாத்திரங்களையும் நல்ல கதைக்களங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் கார்த்தி, இயக்குனர் P.S.மித்ரன் இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சர்தார் திரைப்படம் இந்த ஆண்டு (2022) தீபாவளி வெளியீடாக அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ளது.

முன்னதாக ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் பல மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

இதனிடையே இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்திருக்கும் விருமன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி ரிலீசாகிறது. இத்திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் அனைத்தும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று ஆகஸ்ட் 8ஆம் தேதி சென்னையில் விருமன் படக்குழுவினரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராஜு முருகன் விருமன் படத்திற்காக இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். இந்நிலையில் நேற்று விருமன் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ராஜூமுருகன், நடிகர் கார்த்தி அடுத்து நடிக்கும் புதிய படத்தை இயக்குவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், இதனை தற்போது இயக்குனர் ராஜுமுருகன் உறுதிசெய்துள்ளது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த இதர அறிவிப்புகள் விரைவில் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.