ஆரம்பக் கட்டத்தில் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் விமல் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தார். தொடர்ந்து களவாணி, தூங்கா நகரம், வாகைசூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, என வரிசையாக பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார் விமல்.

கடைசியாக விமல் நடித்த விலங்கு வெப்சீரிஸ் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து விமல் நடிப்பில் சண்டைக்காரி, எங்க பாட்டன் சொத்து, மஞ்சள் குடை, குலசாமி மற்றும் தெய்வ மச்சான் ஆகிய  திரைப்படங்கள் வரிசையாக தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் அடுத்ததாக விமல் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் துடிக்கும் கரங்கள். இயக்குனர் வேலு தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் துடிக்கும் கரங்கள் திரைப்படத்தில் மிஷா நரங் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சதீஷ் மற்றும் சௌந்தர ராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஒடியன் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் துடிக்கும் கரங்கள் திரைப்படத்திற்கு ரம்மி ஒளிப்பதிவு செய்ய, ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் துடிக்கும் கரங்கள் திரைப்படத்தில் இருந்து வா பாவா எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. துடிக்கும் கரங்கள் படத்தின் துள்ளளான வா பாவா பாடல் இதோ…