தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் லிங்குசாமி, ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து இவர் இயக்கத்தில் நடிகர் மாதவன் கதாநாயகனாக நடித்த ரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

தொடர்ந்து அஜீத் குமாருடன் இணைந்து ஜி, விஷாலுடன் சண்டக்கோழி, சீயான் விக்ரமுடன் பீமா, நடிகர் கார்த்தியின் பையா, நடிகர் மாதவன் & ஆர்யா இணைந்து நடித்த வேட்டை என பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக நடிகர் சூர்யா நடித்த அஞ்சான் மற்றும் நடிகர் விஷாலுடன் இணைந்து உருவாக்கிய சண்டக்கோழி 2 ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்நிலையில் ,அடுத்ததாக புதிய திரைப்படத்தை லிங்குசாமி இயக்குகிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ராம் போத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்குகிறார்.

 #RAPO19 என குறிப்பிடப்படும் ராம் போத்தினேனியின் 19வது திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்க ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்டூரி தயாரிக்கிறார். பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரிஷ்யம் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். 

நடிகர் ராம் போத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை 12ம் தேதி முதல் துவங்குவதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது குறிப்பிடதக்கது.