டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 26 பேர் கொண்ட இந்திய அணியில் நம் தமிழ் மண்ணைச் சேர்ந்த 3 தமிழச்சிகள் இடம் பெற்றுள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் தடகளப் போட்டிகள் மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. அதன் படி, ஜூலை 31 ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று இந்த போட்டிகள் நிறைவு பெறுகிறது. 

இந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 26 பேர் கொண்ட இந்திய அணியை, இந்தியத் தடகள சம்மேளனம் நேற்றைய தினம்  அறிவித்தது. இந்த பட்டியலில், நம் தமிழ் மண்ணைச் சேர்ந்த 3 தமிழ் வீராங்கனைகள் அலங்கரித்து உள்ளனர்.

அதன் படி, அவினாஷ் சேபிள், எம்.பி. ஜபீர் - 400 மீ தடை ஓட்டத்திலும், எம். ஸ்ரீஷங்கர் - நீளம் தாண்டுதலிலும் இடம் பிடித்து உள்ளனர். 

தாஜிந்தர்பால் சிங் டூர் - குண்டு எறிதல் போட்டியிலும், நீரஜ் சோப்ரா மற்றும் சிவ்பால் சிங் - ஈட்டி எறிதலிலும், கே.டி. இர்பான், சந்தீப் குமார் மற்றும் ராகுல் ரோஹில்லா 20 கிலோ மீட்டர் நடை பந்தயத்திலும் இடம் பிடித்து உள்ளனர்.

அதே போல், குர்பிரீத் சிங் - 50 கிலோ மீட்டர் நடை பந்தயத்திலும், அமோஜ் ஜேக்கப், ஆரோக்கிய ராஜீவ், முகமது அனஸ், நாகநாதன் பாண்டி - 4.400 தொடர் ஓட்டத்திலும், நோவா நிர்மல் டாம், சர்தக் பாம்ப்ரி, அலெக்ஸ் ஆண்டனி - கலப்பு தொடர் ஓட்டத்திலும் இடம் பிடித்து உள்ளனர். இவர்களில் ஆரோக்கிய ராஜீவ் மற்றும் நாகநாதன் பாண்டி ஆகியோர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். 

அதே போல், டோக்கியோ ஒலிம்பிக்கில் வீராங்கனைகள் பட்டியலில், டூட்டி சந்த் - 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்திலும், கமல்பிரீத் கவுர் மற்றும் சீமா ஆன்டில் - புனியா ஆகியோர் - வட்டு எறிதல் போட்டியலும் இடம் பிடித்து உள்ளனர். 

அன்னு ராணி, பாவ்னா ஜாட் மற்றும் பிரியங்கா கோஸ்வாமி - 20 கிலோ மீட்டர் நடை போட்டியில் இடம் பெற்றுள்ளனர். 

குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர் ஆகிய 3 பேரும், டோக்கியோ ஒலிம்பிக்கின் தடகளப் போட்டிகளில் இந்திய அணி சார்பில் போட்டியில் கலந்துகொண்டு விளையாடுகிறார்கள். இந்த 3 பேரும் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்கின்றனர். 

இதில், ரேவதி வீரமணி மதுரையைச் சேர்ந்தவர். மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்தவர் ரேவதி வீரமணி, சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்தவர். இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி தோஹாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஆசிய சாம்பியனாகவும், தற்போது பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்றுவரும் மாநிலங்களுக்கு இடையிலான தேசிய விளையாட்டுப் போட்டியில், கடந்த ஜூன் 29 ஆம் தேதி 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தேசிய சாம்பியனாகவும் தேர்வு பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

அதே போல், திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த சுபா வெங்கடேசன், கலப்பு 4×400 தொடர் ஓட்டப் போட்டியில் கலந்துகொள்கிறார். இவர், சென்னை தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சி ஆணைய விடுதியில் பயிற்சி பெற்றார். 

அதே போல், திருச்சி லால்குடியைச் சேர்ந்த தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ் 4×400 ஆடவர் தொடர் ஓட்டப் போட்டியில் கலந்துகொள்ளத் தகுதி பெற்று உள்ளார். இந்த வகையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 2 வீராங்கனைகள் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர், இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிக்கு தேர்வாகியுள்ள மதுரை ரேவதிக்கு, தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், “தங்கம் வென்று பெருமை சேர்க்க வேண்டும்” என்று, வாழ்த்திக்களை தெரிவித்து உள்ளார். அதே போல், ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள உள்ள 3 பேருக்கும் தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.